

கிளாஸ்கோ,
இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் 26-வது பருவநிலை மாநாடு கடந்த 31-ந்தேதி தொடங்கியது. வருகிற 12-ந்தேதிவரை நடக்கும் இம்மாநாட்டில், இந்தியா உள்பட 200 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
பாரீஸ் ஒப்பந்தப்படி, புவி வெப்பநிலையை குறைப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இதில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏற்பாட்டில் வனம் மற்றும் நில பயன்பாடு குறித்த நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதில், நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கனடா, ரஷியா, பிரேசில், கொலம்பியா, இந்தோனேஷியா, காங்கோ ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். உலக காடுகளில் 85 சதவீத காடுகள், இந்த நாடுகளில்தான் இருப்பது குறிப்பிடத்தக்கது. 2030-ம் ஆண்டுக்குள், காடுகள் அழிப்புக்கும், நிலம் சீரழிவுக்கும் முற்றுப்புள்ளி வைக்க நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்களும் உறுதி எடுத்துக்கொண்டனர். இதுதொடர்பான பிரகடனம் வெளியிடப்பட்டது.