போயிங் 777 ரக விமானத்தில் எஞ்சின் கோளாறு - அவசர அவசரமாக தரையிறக்கம்

ரஷியாவில் போயிங் 777 ரக சரக்கு விமானத்தில் திடீரென எஞ்சின் கோளாறு ஏற்பட்டது. இதனால், விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
போயிங் 777 ரக விமானத்தில் எஞ்சின் கோளாறு - அவசர அவசரமாக தரையிறக்கம்
Published on

மாஸ்கோ,

அமெரிக்காவில் கடந்த சனிக்கிழமை டென்வர் நகரில் இருந்து ஹோனோலுலு நகருக்கு 231 பயணிகளுடன் புறப்பட்ட யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 777 ரக விமானம் புறப்பட்டது.

புறப்பட்ட சிறிது நேரத்தில் நடுவானில் விமானத்தின் எஞ்சினில் தீப்பிடித்து எரிந்தது. மேலும் விமானத்தின் என்ஜின் பாகங்கள் ஒவ்வொன்றாக உடைந்து விழுந்தன. இதனையடுத்து விமானம் உடனடியாக டென்வர் விமான நிலையத்துக்கு திருப்பப்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதன் மூலம் பயணிகள் அனைவரும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்கா உள்பட சில நாடுகளில் போயிங் 777 ரக விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஹாங்காங்கில் இருந்து ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் நகருக்கு ரஷியாவின் ரோஷியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 777 ரக சரக்கு விமானம் இன்று பயணம் மேற்கொண்டது.

விமானம் ரஷியாவின் வான்பரப்பில் அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 4.30 மணியளவில் பறந்து கொண்டிருந்தபோது விமான எஞ்சினில் திடீரென கோளாறு ஏற்பட்டது.

இதனால், அதிர்ச்சியடைந்த விமானி போயிங் 777 ரக சரக்கு விமானத்தை ரஷியாவில் உள்ள ஷிரிமிட்யுவோ சர்வதேச விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கினார்.

இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விமானத்தின் இடது பக்கத்தில் உள்ள ஒரு எஞ்சினில் திடீரென கோளாறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோளாறு ஏற்பட்ட எஞ்சினின் ரகம் எது? என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை. மேலும், இந்த சம்பவம் குறித்து விமான நிறுவனம் தரப்பில் விசாரணை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com