

லண்டன்,
இங்கிலாந்து நாட்டில் 59 வயதான தொலைக்காட்சி தொகுப்பாளினி ஒருவர், நேரலை நிகழ்ச்சியில் தனது கர்ப்பத்தை அறிவித்ததுடன், இணையத்தில் தன்னை விமர்சித்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
இங்கிலாந்து நாட்டின் ஜிபி நியூஸ் தொலைக்காட்சியில் கடந்த நவம்பர் 14-ம் தேதி 'தி சாட்டர்டே பைவ்' நேரலை விவாத நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அந்த நிகழ்ச்சியில் ஆக்ஸ்போர்டுஷயர் பகுதியில் அகதிகள் தங்குமிடம் அமைப்பது குறித்த விவாதத்தின் இடையே, தான் 12 வார கர்ப்பமாக இருப்பதாகவும், விரைவில் 3-வது குழந்தைக்கு தாயாகப் போவதாகவும் தொகுப்பாளினியும் மருத்துவருமான டாக்டர் ரெனி ஹோண்டர்காம்ப் அறிவித்தார். இதைக் கேட்டதும் சக தொகுப்பாளர்கள் முதலில் அதிர்ச்சியடைந்து, பின்னர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இவருக்கு ஏற்கனவே 37 வயதில் ஒரு மகனும், 8 வயதில் ஒரு மகளும் உள்ளனர். தனது 30-களில் உறையவைத்துப் பாதுகாத்த கருமுட்டைகளைக் கொண்டு, போலந்து நாட்டில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் ஐவிஎப் சிகிச்சை மூலம் 3-வது முயற்சியில் இவர் கருத்தரித்துள்ளார். குழந்தை பிறக்கும்போது இவருக்கு 60 வயதாகியிருக்கும்.
இந்த அறிவிப்புக்குப் பிறகு, இந்த வயதில் குழந்தை பெற்றுக்கொள்வது "சுயநலமானது" என இணையத்தில் சிலர் விமர்சித்தனர். இதற்கு கடந்த 16-ம் தேதி 'டெய்லி மெயில்' நாளிதழில் கட்டுரை எழுதிப் பதிலளித்த ரெனி, "எனது 66 வயது கணவர் மீண்டும் தந்தையாவதை யாரும் விமர்சிக்காத நிலையில், பெண்களை மட்டும் விமர்சிப்பது சமூகத்தின் இரட்டை நிலைப்பாட்டைக் காட்டுகிறது" என தெரிவித்துள்ளார். மேலும், தனது வயதும் அனுபவமும் தன்னை ஒரு சிறந்த தாயாக மாற்றியுள்ளதாகவும், எதிர்மறை விமர்சனங்களைத் தான் பொருட்படுத்தவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.