நாய்க்குட்டிகளுக்கு இரங்கிய இங்கிலாந்துப் பெண்!

இலங்கையின் வீதியோரத்தில் கைவிடப்பட்ட நாய்க்குட்டிகளைக் கண்ட இங்கிலாந்து இளம்பெண் ஒருவர், அவற்றை தன் நாட்டுக்குக் கொண்டு செல்ல நிதி திரட்டுகிறார்.
நாய்க்குட்டிகளுக்கு இரங்கிய இங்கிலாந்துப் பெண்!
Published on

தனது கணவருடன் இலங்கைக்கு சுற்றுலா வந்த இங்கிலாந்துப் பெண் ஹெலினா ஹான்சான், 4 நாய்க்குட்டிகள் தெருவோரம் பசி மற்றும் குளிரில் நடுங்கிய நிலையில் கிடப்பதைப் பார்த்திருக்கிறார்.

உடனே அந்த நாய்க்குட்டிகளை ஓட்டல் ஒன்றுக்கு கொண்டு சென்று உணவளித்து குளிரைப் போக்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறார்.

பின்னர் அந்த நாய்க்குட்டிகளுக்கு அவர் பெயர் வைத்துள்ளார். அவை பிறந்து ஒருநாள்தான் ஆகியிருக்கிறது எனத் தெரியவந்தபோது ஆச்சரியமாக இருந்தது என அந்தப் பெண் கூறியுள்ளார்.

நான்கு நாய்க்குட்டிகளில் மோசமான நிலையில் காணப்பட்ட ஒரு குட்டி தற்போது இறந்துவிட்டது. இலங்கை தெருக்களில் நாய்க்குட்டிகள் இவ்வாறு தனித்து விடப்படுவது பொதுவான ஒரு விஷயமாகியுள்ளதாகவும், அவற்றின் தாய் குட்டிகளுக்கு உணவு தேடச் சென்று விடுவதாகவும் ஹெலினா கூறுகிறார்.

இதுபோன்ற ஆதரவற்ற நாய்க்குட்டிகள் மீது இரக்கம் கொண்டு செயல்படுகிறார் ஹெலினா. ஊடகவியலில் பட்டம் பெற்றவரான இவர், இலங்கையில் சுமார் 1200 தெரு நாய்களை காப்பாற்றியதாகக் கூறுகிறார்.

தற்போது தன்னிடம் இருக்கும் 3 நாய்க்குட்டிகளையும் இங்கிலாந்தில் உள்ள தனது வீட்டுக்குக் கொண்டு செல்ல எண்ணியிருப்பதாகவும், அங்கு அவை சுற்றித் திரிந்து விளையாட முடியும் எனவும் ஹெலினா தெரிவித்துள்ளார்.

நாய்க்குட்டிகளை கொண்டு செல்வதற்கு ரூ. 1.84 லட்சம் தேவைப்படுவதாகவும், அதற்காக தாம் நிதி உதவிகளை எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த முயற்சியில் இதுவரை ஹெலினா ரூ.46 ஆயிரம் திரட்டிவிட்டாராம்.

எளிய உயிர்களுக்கும் இரங்கும் உயர்ந்த உள்ளம்!

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com