

கோபென்ஹகன்,
கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக பல்வேறு மருந்து நிறுவனங்கள் தயாரித்துள்ள தடுப்பு மருந்துகள், உலக சுகாதார மையத்தின் அறிவுறுத்தல்படி, பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இதில் சில மருந்துகள் பக்க விளைவுகளை ஏறப்டுத்துவதாக கூறப்பட்டாலும், தடுப்பூசியால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பில்லை என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த மருந்து நிறுவனமான அஸ்ட்ரா ஜெனகா தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்தானது, பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மருந்தை செலுத்திக் கொண்டவர்களில் சிலருக்கு ரத்தம் உறையும் தன்மை ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன.
ஆஸ்திரியா நாட்டில் 42 வயதான நர்ஸ் ஒருவருக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டது. இதனால் அவருக்கு ரத்தம் உறைதல் பிரச்சினை ஏற்பட்டது. இதில் அவர் பலியானர். இதையடுத்து, அந்த மருந்து பயன்பாட்டை ஆஸ்திரியா நிறுத்திக் கொண்டது. இதுதவிர எஸ்டானியா, லட்வியா, லித்வானியா, லக்சம்பர்க் ஆகிய நாடுகளும் அஸ்ட்ரா ஜெனிக்கா தடுப்பு மருந்தை பயன்படுத்துவதை நிறுத்திக் கொண்டன.
தற்போது டென்மார்க்கிலும் இந்த மருந்துக்கு தடைவிதிக்கப்பட்டது. இது குறித்து அந்த நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும் போது, மார்ச் 9-ந் தேதி ஐரோப்பியா நாடுகளில் அஸ்ட்ரா ஜெனிக்கா மருந்து செலுத்தியவர்களில் 22 பேருக்கு ரத்தம் உறைந்ததாக புகார்கள் எழுந்தன. எனவே அந்த மருந்து பயன்பாடு எங்கள் நாட்டில் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது என்று தெரிவித்தனர்.
ஸ்பெய்ன் நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் கரோலினா டாரியஸ் கூறுகையில், எங்கள் நாட்டில் இதுவரை அஸ்ட்ரா ஜெனகா மருந்து காரணமாக ரத்தம் உறைதல் பிரச்சினை யாருக்கும் ஏற்படவில்லை. இருப்பினும் ஐரோப்பிய மருத்துவக் கழகம் இது குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிடும் வரை, 55 முதல் 65 வயது வரையிலான நபர்களுக்கு அஸ்ட்ரா ஜெனகா மருந்தை செலுத்துவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.