மின்சார வாகனங்களில் பாதுகாப்புக்கே முன்னுரிமை: மத்திய மந்திரி நிதின் கட்காரி உறுதி

மின்சார வாகனங்களில் பாதுகாப்புக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி உறுதியளித்துள்ளார்.
Image Courtesy: PTI
Image Courtesy: PTI
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் சமீப காலமாக இருசக்கர மின்சார வாகனங்கள் தீப்பிடித்து எரிகிற சம்பவங்களை பார்க்க முடிகிறது. இதில் உயிரிழப்புகள் நேர்கின்றன. பலர் படுகாயங்களும் அடைகின்றனர். இது மின்சார வாகனங்களை வாங்கி பயன்படுத்துவதில் மக்கள் மத்தியில் தயக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்த தருணத்தில், டெல்லியில் ஆண்டு தோறும் ரைசினா டயலாக் என்ற பெயரில் நடந்து வருகிற பலதரப்பட்ட மாநாட்டில் மத்திய போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி நேற்று கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் இந்த மின்சார வாகன விபத்து பிரச்சினையை குறிப்பிடத்தவறவில்லை. அவர் பேசும்போது கூறியதாவது:-

மின்சார வாகனங்களை பிரபலப்படுத்த அரசு விரும்புகிறது. இந்தியாவின் மின்சார வாகன தொழில்துறை இப்போதுதான் தொடங்கி இருக்கிறது என்பதை ஏற்கிறேன். அரசு அவர்களுக்கு தடைகளை ஏற்படுத்த விரும்பவில்லை. ஆனால், பாதுகாப்பு என்பது அரசின் மிக உயர்ந்த முன்னுரிமை ஆகும். மனித உயிர்களை பொறுத்தமட்டில் எந்த சமரசத்துக்கும் இடம் இல்லை.

இந்தியாவில் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் வெப்ப நிலை உயர்கிறது. இதனால் மின்சார பேட்டரிகளில் பிரச்சினை ஏற்படுகிறது. இரு சக்கர மின்சார வாகனங்களில் தீப்பிடிக்கிறது என்றால், இதற்கு காரணம் அதிகபட்ச வெப்பநிலை என்றுதான் நான் கருதுகிறேன். குறைபாடுள்ள வாகனங்களை உற்பத்தி நிறுவனங்கள் உடனடியாக திரும்பப்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com