நிலநடுக்கம் ஏற்பட்டபோதும்... சிறுவனுக்கு உணவுதான் முக்கியம்; வைரலான வீடியோ


நிலநடுக்கம் ஏற்பட்டபோதும்... சிறுவனுக்கு உணவுதான் முக்கியம்; வைரலான வீடியோ
x

வாழ்வா, சாவா நிலையில் சிறுவன் இதுபோன்று நடந்து கொண்ட வீடியோ வைரலானதும் நெட்டிசன்கள் ஆச்சரியமடைந்து விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

குவிங்யுவான்,

சீனாவின் தெற்கே குவாங்டாங் மாகாணத்தில் குவிங்செங் மாவட்டத்தில் குவிங்யுவான் நகரம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் கடந்த 2 தினங்களுக்கு முன் நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானது.

அப்போது, வீடுகள், குடியிருப்புகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இந்நிலையில், வீடு ஒன்றில் நிலநடுக்கத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

அதில், தந்தை மற்றும் அவருடைய 2 மகன்கள் டைனிங் ஹாலில் அமர்ந்து உணவு சாப்பிட்டபடி இருந்தனர். அப்போது, திடீரென வழக்கத்திற்கு மாறாக சத்தம் கேட்டது. நிலநடுக்கமும் உணரப்பட்டது.

இதனை கவனித்த சிறுவர்களின் தந்தை, சாப்பாட்டை அப்படியே விட்டு விட்டு, எழுந்து இளைய மகனை கையில் பிடித்தபடி அந்த பகுதியில் இருந்து விலகி பாதுகாப்பான பகுதியை நோக்கி ஓடினார். மற்றொரு மகனையும் கூட வரும்படி சத்தம் போட்டார். அந்த சிறுவனும் அவர்களை பின்தொடர்ந்து ஓடினான். ஆனால், அந்த சிறுவன் என்ன நினைத்தானோ தெரியவில்லை.

திரும்பி வந்து மேஜையில் இருந்த உணவை வேகவேகமாக எடுத்து வாயில் திணித்துள்ளான். இதன்பின்னர், மேஜையின் மீதிருந்த சுழலும் பலகையை சுழற்றி விட்டு, மறுபுறத்தில் இருந்த உணவையும் எடுத்து சாப்பிட்டு விட்டு ஓடினான். திரும்பவும் வந்து மீதமிருந்த அவனுக்கு பிடித்த உணவை எடுத்து சாப்பிட்டான்.

பின்னர், வீட்டினருக்கு தேவையான உணவை பாத்திரத்தில் எடுத்து கொண்டு மீண்டும் ஓடினான். வாழ்வா, சாவா நிலையில் சிறுவன் இதுபோன்று நடந்து கொண்ட வீடியோ வைரலானதும் நெட்டிசன்கள் ஆச்சரியமடைந்து விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

அதில் ஒருவர், அடுத்து வாழ போகிறோமோ அல்லது சாக போகிறோமோ தெரியாது. குறைந்தது, பிடித்த உணவையாவது சாப்பிட்டு விட வேண்டும் என பதிவிட்டு உள்ளார்.

1 More update

Next Story