

மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதர் காதல் அல்ல, அதையும் தாண்டி புனிதமானது. இது சினிமாவுக்காக பேசப்பட்ட வார்த்தை நிஜத்திலும் சில காதல் நிகழ்வுகள் நம்மை நெகிழ வைத்து விடுகிறது.
காதல் என்பது இளம் பருவத்தில் தோன்றும் உடல் மீதான கவர்ச்சி என்பதல்ல, ஆணும் பெண்ணும் இணைந்து திருமணத்துக்கு பிறகும் காதலோடு வாழும் வாழ்க்கைதான் நிஜக்காதலின் அடையாளம். அந்த மாதிரி காதலில் கருத்தொருமித்து கணவன், மனைவியாக வாழ்வது நம் நாட்டில்தான். அதுதான் இந்த மண்ணுக்கு பெருமை என்று நினைக்கிறோம்.
ஆனால் நம் நினைப்புகளுக்கு அப்பாற்பட்டு வெளிநாடுகளிலும் நாமே ஆச்சரியப்படும் அளவுக்கு காதலோடு வாழ்ந்து காட்டுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இந்த தம்பதிகள் சீனாவின் ஹெனான் மாநிலத்தை சேர்ந்தவர்கள். இவர்களின் இல்லற வாழ்க்கைக்கு அடையாளமாக 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். நன்றாகவே சென்று கொண்டிருந்த அவர்களின் மணவாழ்க்கையில் அப்படி ஒரு சோகப்புயல் வீசும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை.
இன்றில் இருந்து 7 ஆண்டுகளுக்கு முன்பு... இதே அக்டோபர் மாதத்தில் ஒருநாள்... ஜாவோ வேலை செய்து கொண்டிருந்த ஒரு கிடங்கின் மேற்கூரையில் கமார் 3 வயது குழந்தை ஒன்று சிக்கி கொண்டு போராடியது. மற்றவர்களைப் போல் வேடிக்கை பார்த்தபடி செல்ல ஜாவோவுக்கு மணம் இடம் கொடுக்கவில்லை. அந்த குழந்தையை காப்பாற்ற முடிவெடுத்து மேற்கூரைக்கு ஏறினார். அந்த குழந்தையை மீட்டு தன் உடலோடு கட்டி அணைத்தப்படி கீழே இறங்கினார். எதிர்பாராதவிதமாக சுமார் 10 அடி உயரத்தில் இருந்து தடுமாறி கீழே விழுந்தார். கீழே விழுந்த போது அந்த குழந்தைக்கு ஏதும் அடிப்பட்டு விடக்கூடாது என்று குழந்தையை மார்போடு அனைத்தப்படி கீழே விழுந்தார்.
இதில் ஜாவோவுக்கு தலையில் பலத்த அடிபட்டது. இதனால் மூளையில் பாதிப்பு ஏற்பட்டது. பலத்த காயத்தோடு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஜாவோ கோம நிலைக்கு சென்றுவிட்டார். சுயநினைவு என்று திரும்பும் என்று சாங்மெய்யும் அவரது குழந்தைகளும் ஆஸ்பத்திரியில் தவித்தப்படி இருந்தனர்.
ஒன்றிரண்டு மாதங்கள் கழிந்திருந்தும் இனி ஜாவோவுக்கு சுயநினைவு திரும்புவது சாத்தியமல்ல எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் தொடர்ந்து மாத கணக்கில் அல்லது வருட கணக்கில் பராமரிப்பதும் சிரமம். உங்களுக்கு பாரமாகவே இருக்கும் என்று டாக்டர்கள் கைவிரித்து விட்டனர்.
ஆனால் சாங்மெய் தனது கணவரை பாரமாக கருதவில்லை. அவர் மீது நான் வைத்திருக்கும் காதல் உண்மையானால் அவர் மீண்டு வருவார். நிச்சயம் அவரை மீட்பேன் என்று வைராக்கியத்தோடு இருந்தார். தினமும் அருகில் இருந்து கணவரை பராமரிக்க தொடங்கினார். டாக்டர்கள் ஆலோசனைப்படி மசாஜ் செய்தார். கை, கால் விரல்களை உணர்ச்சியை தூண்டும் வகையில் தனது கைகளால் நீவி விட்டார்.
அத்துடன் கணவரின் காது அருகில் சென்று பேசினார். அவருக்கு கேட்காது என்பது தெரியும். ஆனாலும் அவர்கள் காதலில் திளைத்து வாழ்ந்த காலத்தில் பேசிக் கொண்டதை எல்லாம் பேசினார். அவர் பதில் கூறும் நிலையில் இல்லா விட்டாலும் அவரது உள்மனம் உணரும் என்ற நம்பிக்கை சாங்மெய்யிடம் இருந்தது. இப்படியே நாட்கள், மாதங்களாகி. வருடங்களாகியது. 5 வருடங்களுக்கு பிறகு கடந்த 2024-ல் உடலில் லேசாக அசைவு தெரிந்தது. அதை பார்த்ததும் டாக்டர்களுக்கும் நம்பிக்கை பிறந்தது.
தொடர்ந்து மறுவாழ்வுக்கான தொடர் பயிற்சிகளும், சிகிச்சை முறைகளும் தொடர்ந்தன. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஜாவோவின் கண்கள் திறந்தன. அருகில் நின்று கொண்டிருந்த மனைவியை பார்த்ததும் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
அதை பார்த்ததும் தன் கண்ணில் பீறிட்டு வந்த கண்ணீரை அடக்கியபடி நீங்கள் அழக்கூடாது என்றபடி கணவரின் தலையை வாஞ்சையுடன் கோதிவிட்டார். சிரமப்பட்டு லேசாக திரும்பியவர் சாங் ஐ லவ்யூ என்றார்.
அதற்கு மேலும் கண்ணீரை அடக்க முடியாத சாங் கணவரை ஆரத்தழுவிக்கொண்டார்.
இன்னும் அவர் முழுமையாக குணம் அடையவில்லை. பேசுவதை புரிந்துகொள்ள முடிகிறது. கைகளை உயர்த்தி பதில் சொல்கிறார். சிறிது நேரம் அவரால் எழுந்து நிற்கவும் முடிகிறது. இன்னும் சில மாதங்களில் பூரணமாக குணம் அடைந்து விடுவார் என்று டாக்டர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். உண்மையான காதல் வலிமையானது புனிதமானது அது நிச்சயம் வெல்லும் என்பதற்கு இந்த தம்பதிகளே சான்று.