சிறந்த டி.வி. தொடர் நடிகராக இந்திய வம்சாவளியை சேர்ந்த அன்சாரி தேர்வு

இந்த ஆண்டுக்கான ‘கோல்டன் குளோப்’ விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த டி.வி. தொடர் நடிகராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அசிஸ் அன்சாரி தேர்வு செய்யப்பட்டார்.
சிறந்த டி.வி. தொடர் நடிகராக இந்திய வம்சாவளியை சேர்ந்த அன்சாரி தேர்வு
Published on

லாஸ்ஏஞ்சல்ஸ்,

சிறந்த மற்றும் நகைச்சுவை சினிமா, டி.வி. சினிமா, டி.வி. தொடர் ஆகியவற்றை ஊக்குவிக்கும் விதமாக கோல்டன் குளோப் என்னும் விருது அமெரிக்காவில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. ஆஸ்கர் விருதுக்கு இணையாக கூறப்படும் இவ்விருதை சினிமா, டி.வி. நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் பெறுவதை தங்களது லட்சியமாகவும் நினைப்பது உண்டு.

இந்த ஆண்டு கோல்டன் குளோப் விருதுக்கு பவளவிழா (75-ம் ஆண்டு) ஆகும். இதையொட்டி இந்த விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று முன்தினம் நடந்தது.

இதில் நகைச்சுவை பிரிவில் சிறந்த டி.வி. தொடர் நடிகருக்கான விருதை 34 வயது இந்திய வம்சாவளியான அசிஸ் அன்சாரி தட்டிச் சென்றார். தி மாஸ்டர் ஆப் நன் என்ற டி.வி. தொடரில் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. 2016-ம் ஆண்டு இவருடைய பெயர் இந்த விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்டு இறுதிச் சுற்றில் வாய்ப்பு நழுவிப்போனது.

இப்போதும் அன்சாரிக்கு விருது கிடைக்க வாய்ப்பில்லை என்றே அமெரிக்க ஊடகங்கள் ஆரூடம் கூறியிருந்தன. ஆனால் அதை பொய்யாக்கி அன்சாரி சிறந்த டி.வி. தொடர் நடிகருக்கான விருதை தட்டிச் சென்றார். கணிப்புகளை மீறி தனக்கு கிடைத்து இருக்கும் விருது தித்திக்கிறது என்று அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

பிரபல ஹாலிவுட் நடிகை நிகோலி கிட்மேன், பிக் லிட்டில் லைஸ் என்ற டி.வி. சினிமாவில் நடித்ததற்காக சிறந்த நடிகை விருதை பெற்றார். இந்த டி.வி. சினிமா மேலும் 3 விருதுகளை வென்றது. சிறந்த டி.வி. தொடர் நடிகையாக ராச்சல் பிராஸ்னன் (தி மார்வலஸ் மிசஸ் மைசல்), சிறந்த டி.வி. தொடர்(நாடகம்) நடிகராக ஸ்டெர்லிங் கே.பிரவுனும் (திஸ் இஸ் அஸ்) தேர்வு பெற்றனர்.

சிறந்த சினிமா இயக்குனருக்கான கோல்டன் குளோப் விருது தி ஷேப் ஆப் தி வாட்டர் படத்தை இயக்கிய மெக்சிகோ நாட்டின் 53 வயது குல்லெர்மோ டெல் டோராவுக்கு கிடைத்தது. முதல் முயற்சியிலேயே இந்த விருதை அவர் பெற்றுள்ளார்.

சிறந்த சினிமா(நாடகம்) நடிகருக்கான கோல்டன் குளோப் விருது டார்க் ஹவர் என்ற படத்தில் நடித்த 59 வயது கேரி ஓல்டு மேனுக்கு கிடைத்தது. இதில் இங்கிலாந்தின் மறைந்த முன்னாள் பிரதமரான வின்ஸ்டன் சர்ச்சில் வேடத்தில் அவர் நடித்து இருந்தார்.

இசை அல்லது நகைச்சுவை சினிமா படங்களுக்கான பிரிவில் சிறந்த நடிகைக்கான விருதை சவோரிசே ரொனன் (லேடி பேர்ட்) தட்டிச் சென்றார். மேலும் இது சிறந்த நகைச்சுவை படமாகவும் தேர்வு செய்யப்பட்டது.

சிறந்த சினிமாவுக்கான(நாடகம்) விருது திரீ பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங், மிசோரி என்ற படத்துக்கு கிடைத்தது. இதில் நடித்த பிரான்செஸ் மென்டோர்மண்ட் சிறந்த நடிகையாகவும் (சினிமா நாடகம்) தேர்வு செய்யப்பட்டார்.

சிறந்த வெளிநாட்டு சினிமாவுக்கான விருது இன் தி பேட் படத்துக்கு (ஜெர்மனி மற்றும் பிரான்ஸ்) கிடைத்தது. விழாவில் பிரபல டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளர் ஓப்ரா வின்பிரேவுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.

விழாவை தொகுத்து வழங்கிய நடிகர் சேத் மேயர்ஸ் மற்றும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய நடிகைகள் அனைவரும் ஹாலிவுட் திரையுலகில் நடிகைகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாவது பற்றி மறைமுகமாக குற்றம் சாட்டினர்.

மேலும் நடிகைகளில் பலர் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக கருப்பு உடை அணிந்தும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com