

டோக்கியோ,
நிசான் கார் தயாரிப்பு நிறுவனத்தின் முன்னாள் தலைவராக இருந்தவர் கார்லோஸ் கோசன் (வயது 64). பிரேசில் நாட்டில் பிறந்தவரான கார்லோஸ், ரினால்ட், நிசான் மற்றும் மிட்சுபிஷி ஆகிய மூன்று கார் தயாரிப்பு நிறுவனங்களின் தலைவராகவும் இருந்து வந்துள்ளார்.
இவர் நிதி முறைகேடுகளில் ஈடுபடுகிறார் என கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து பல மாதங்களாக கார்லோசிடம் அந்நிறுவனம் விசாரணை நடத்தியுள்ளது.
இதில் அவர் பல வருடங்களாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. தனது வருவாயை இவர் குறைத்து அறிக்கை தாக்கல் செய்தது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. நிறுவனத்தின் சொத்துகளை சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்திய தகவலும் வெளிவந்தது. இவருடன் இணைந்து நிறுவனத்தின் பிரதிநிதி இயக்குநரான கிரேக் கெல்லியும் முறைகேட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதனை அடுத்து நிறுவன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடந்த நவம்பர் 19ந்தேதி அவர் கைது செய்யப்பட்டார். அவர் நிதி முறைகேட்டில் ஈடுபட்டது பற்றி ஜப்பானிய வழக்கறிஞர்களிடம் நிசான் நிறுவனம் போதிய தகவல் அளித்துள்ளது. இதனை தொடர்ந்து முறைப்படி கார்லோஸ் மற்றும் கெல்லி ஆகியோரை பதவியில் இருந்து நீக்க, வாரிய இயக்குநர்களிடம் தெரிவிப்போம் என்றும் தெரிவித்திருந்தது.
இதன்பின் கார்லோஸ் வடக்கு டோக்கியோ நகரில் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து இரு முறை ஜாமீன் கோரி மனு செய்தும் அவை நிராகரிக்கப்பட்டன. இந்நிலையில் கோசன் சார்பில் பிரபல வழக்கறிஞரான ஹிரோனாகா கடந்த மாதம் நீதிமன்றத்தில் ஆஜராகி புதிய கோரிக்கை வைத்து அதில் வெற்றி பெற்றுள்ளார்.
இதனால் 100 நாட்களாக சிறையில் இருந்த வந்த கோசன் ஜாமீனில் இன்று விடுதலை செய்யப்பட்டார். அவரை 90 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்பில் நீதிமன்றம் விடுவித்துள்ளது.
இதன்பின் அவர் கூறும்பொழுது, நான் தவறு எதனையும் செய்யவில்லை. இந்த குற்றச்சாட்டுகளுக்கு எதிராக என்னை தற்காத்து கொள்ள வேண்டிய கடுமையான சூழலில் உள்ளேன் என கூறியுள்ளார்.
எனினும் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட கோசன் ஜப்பான் நாட்டை விட்டு வெளியே செல்ல தடை விதிக்கப்படுகிறது. அவரது தொலைதொடர்பு வசதிகளும் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளன.
ஜாமீன் வழங்கியது பற்றி எதுவும் கூற மறுத்து விட்ட நிசான் நிறுவனம், இது நீதிமன்றம் மற்றும் வழக்கறிஞர்கள் தொடர்புடைய விவகாரம் என தெரிவித்துள்ளது.