சுவீடனில் 8 நாடுகளின் மந்திரிகளுடன் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சுவீடன் நாட்டில் நடைபெறும் மாநாட்டுக்கு இடையே 8 நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகளை ஜெய்சங்கர் சந்தித்தார்.
image tweeted by @DrSJaishankar
image tweeted by @DrSJaishankar
Published on

ஸ்டாக்ஹோம்,

சுவீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோம் நகரில் ஐரோப்பிய கூட்டமைப்பு-இந்தோ பசிபிக் மந்திரிகள் மாநாடு நடந்து வருகிறது. அதில், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார்.

மாநாட்டுக்கு வந்துள்ள பிற நாடுகளின் வெளியுறவு மந்திரிகளை மாநாட்டுக்கு இடையே ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். லாட்வியா, ஆஸ்திரியா, பிரான்ஸ், பெல்ஜியம், ருமேனியா, சைப்ரஸ், பல்கேரியா, லிதுவேனியா ஆகிய 8 நாடுகளின் வெளியுறவு மந்திரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

லாட்வியா வெளியுறவுத்துறை மந்திரி எட்கர்ஸ் ரிங்கெவிக்சுடனான பேச்சுவார்த்தையின்போது, இருதரப்பு உறவை வலுப்படுத்துவது பற்றி பேசினார். உக்ரைன் போரின் விளைவுகள் பற்றியும் இருவரும் விவாதித்தனர்.

அரசியல் ஒத்துழைப்பு, பொருளாதார ஒத்துழைப்பு பற்றியும், உணவு பாதுகாப்பு குறித்தும் பேசினர்.

ஆஸ்திரியா நாட்டின் வெளியுறவு மந்திரி அலெக்சாண்டர் ஸ்காலன்பெர்க்கை ஜெய்சங்கர் சந்தித்தார். அப்போது, ஆஸ்திரியாவுக்கு தேவையான பணியாளர்களை வரவழைத்துக்கொள்ளவும், சட்டவிரோத குடியேற்றத்தை கட்டுப்படுத்தவும் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இருவரும் உக்ரைன் போர் பற்றியும், இந்தோ-பசிபிக் விவகாரம் குறித்தும் ஆலோசித்தனர்.

பிரான்ஸ் வெளியுறவு மந்திரி கேத்தரின் கொலன்னாவை ஜெய்சங்கர் சந்தித்தபோது, பிரதமர் மோடி ஜூலை மாதம் பாரீஸ் நகரில் நடக்கும் பிரான்ஸ் தேசிய தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பது பற்றி விவாதித்தனர். அந்த பயணத்தை வெற்றிகரமாக ஆக்குவது பற்றி பேசினர்.

மேலும், இந்தோ-பசிபிக், ஜி20 மாநாடு ஆகியவை பற்றியும் கருத்துகளை பரிமாறிக்கொண்டனர்.

லிதுவேனியா, பெல்ஜியம்

லிதுவேனியா நாட்டு வெளியுறவு மந்திரி கேப்ரியலியஸ் லேண்ட்ஸ்பெர்கிசுடனான சந்திப்பின்போது, இருதரப்பு ஒத்துழைப்பு பற்றி பேசப்பட்டது. உலக நிகழ்வுகள் குறித்த ஐரோப்பாவின் பார்வை பற்றியும் விவாதிக்கப்பட்டது.

பெல்ஜியம் வெளியுறவு மந்திரி ஹட்ஜா லபிப்பை ஜெய்சங்கர் சந்தித்தபோது, இருதரப்பு உறவை மேலும் முன்னெடுத்து செல்வது பற்றி இருவரும் ஆலோசனை மேற்கொண்டனர். பொருளாதார, வர்த்தக உறவுகளை வலுப்படுத்த உறுதி எடுத்துக்கொண்டனர். அடிக்கடி சந்திக்க சம்மதம் தெரிவித்தனர்.

பல்கேரியா வெளியுறவு மந்திரி இவான் கொண்டோவுடனான சந்திப்பின்போது, இருதரப்பு உறவு குறித்து பேசப்பட்டது.

மாணவர்கள் மீட்புக்கு உதவி

ருமேனியா வெளியுறவு மந்திரி போக்டன் அவுரெஸ்குவை ஜெய்சங்கர் சந்தித்தபோது, கடந்த ஆண்டு உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்களை மீட்பதில் ருமேனிய அரசு அளித்த உதவிக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். பாதுகாப்பு, எரிசக்தி ஒத்துழைப்பு குறித்தும் பேசினர்.

சைப்ரஸ் வெளியுறவு மந்திரி கான்ஸ்டன்டினோஸ் காம்போசை சந்தித்த ஜெய்சங்கர், சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்புக்கான தேவை குறித்து ஆலோசித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com