

நியூயார்க்,
சமூக வலைதளங்களில் முன்னணி வகிக்கும் நிறுவனமான பேஸ்புக், சமீப காலமாக அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. அண்மையில், பேஸ்புக் நிறுவனம் , லண்டனைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனாலிடிகா என்ற தேர்தல் ஆய்வு நிறுவனத்துடன், தனது வாடிக்கையாளர்கள் குறித்த தகவல்களை பேஸ்புக் நிறுவனம் பகிர்ந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, பேஸ்புக் நிறுவனம் தனது பயனாளர்களின் தகவல்களை ரகசிய ஒப்பந்தத்தின் பேரில் ஆப்பிள் மற்றும் சாம்சங் உள்பட 60 செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்ட தகவல் அண்மையில் வெளியானது. இது தொடர்பாக, வரும் 20ஆம் தேதிக்குள் விளக்கம் தருமாறு, மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த நிலையில், பேஸ்புக் நிறுவனம் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது. பேஸ்புக்கின் மென்பொருளில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு (பக்) காரணமாக
14 மில்லியன் பேஸ்புக் பயனர்கள் தங்களது தனியுரிமை சார்ந்த தகவல்களை தெரியாமலேயே பொதுவெளியில் பகிர்ந்திருப்பார்கள் என்று அந்நிறுவனம் எச்சரித்துள்ளது.
அதாவது, பேஸ்புக் பயனர் ஒருவர் தனது கணக்கில் பதிவிடப்படும் பதிவுகளை 'தனிப்பட்ட' பதிவாக வெளியிடுவதற்கு முன்னரே தேர்ந்தெடுத்திருந்தாலும், அது தற்போது பொதுவெளியில் பகிரப்படுவதற்கு வாய்ப்பிருப்பதாக தெரியவந்துள்ளது. எனினும், கடந்த காலத்தில் தனியுரிமையை தேர்ந்தெடுத்து பகிர்ந்த தகவலில் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை என்றும் பேஸ்புக் விளக்கம் அளித்துள்ளது.
தொழில்நுட்ப கோளாறால் பாதிக்கப்பட்ட பயனாளர்களுக்கு பேஸ்புக் நிறுவனம், அறிவுறுத்தலை அனுப்பி, தங்களின் தனியுரிமையை தேர்வை மறு ஆய்வு செய்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளது.