கொரோனா குறித்து தவறான தகவல்; வெனிசுலா அதிபரின் பேஸ்புக் கணக்கு முடக்கம்

கொரோனா வைரஸ் குறித்து தவறான தகவல் பரப்பியதாக கூறி பேஸ்புக் நிறுவனம் வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவின் கணக்கை முடக்கியது.
கொரோனா குறித்து தவறான தகவல்; வெனிசுலா அதிபரின் பேஸ்புக் கணக்கு முடக்கம்
Published on

கராக்கஸ்,

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் இதுவரை 1 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,500-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அங்கு வைரஸ் பரவலை முழுமையாக கட்டுப்படுத்தும் நோக்கில் ரஷியாவின் ஸ்புட்னிக் தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அந்த நாட்டின் அதிபர் நிகோலஸ் மதுரோ துளசி செடியில் இருந்து தயாரிக்கப்படும் வாய்வழியாக உட்கொள்ளும் மருந்து ஒன்று கொரோனாவை அழிக்கும் என்று தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். எனினும் அவர் இதற்கு மருத்துவ ரீதியான எந்த ஆதாரங்களையும் வழங்கவில்லை. இதையடுத்து கொரோனா வைரஸ் குறித்து தவறான தகவல் பரப்பியதாக கூறி பேஸ்புக் நிறுவனம் அதிபர் நிகோலஸ் மதுரோ கணக்கை முடக்கியது.

இதுகுறித்து பேஸ்புக் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், கொரோனா பற்றிய தவறான தகவலுக்கு எதிரான எங்கள் கொள்கைகளை மீறியதற்காக அதிபர் நிகோலஸ் மதுரோவின் பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோவை நாங்கள் அகற்றினோம். மேலும் அவர் எங்கள் விதிகளை மீண்டும் மீண்டும் மீறுவதால் நாங்கள் அவரது கணக்கை 30 நாட்களுக்கு முடக்குகிறோம் என கூறினார்.

முன்னதாக கொரோனா வைரஸ் குறித்த தவறான தகவல்களை பரப்பியதற்காக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப், பிரேசில் அதிபர் ஜெயில் போல்சனாரோ ஆகியோரின் கணக்குகளையும் பேஸ்புக் முன்னர் முடக்கியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com