

சான் பிரான்ஸிஸ்கோ,
சமூக வலைதளங்களில் முன்னணி வகிக்கும் நிறுவனமான பேஸ்புக், சமீப காலமாக தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்தால், கடுமையான தலைவலிக்குள்ளான பேஸ்புக் நிறுவனத்துக்கு, போலி செய்திகளும் பெரும் பிரச்சினைகளாக உருவெடுத்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலின் போது, அமெரிக்க வாக்காளர்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் நோக்கில் ரஷ்யாவில் இருந்து போலி செய்திகள் பகிரப்பட்டதாக வெளியான தகவலையடுத்து, அமெரிக்க தேர்தலில் பேஸ்புக் நிறுவனத்தின் பங்கு குறித்தும் விவாதப்பொருளானது.
இதையடுத்து, பேஸ்புக் நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், போலி செய்திகளை முற்றிலும் பேஸ்புக் தளத்தில் இருந்து நீக்குவது என்பது, தங்கள் நிறுவனம் கடைபிடிக்கும் அடிப்படைக்கொள்கையான கருத்து சுதந்திரம் என்பதற்கு முரணாக உள்ளதாகவும், ஆகவே, சுட்டிக்காட்டப்படும் செய்திகள், போலி செய்திகள் என தெரியவந்தால், அவற்றை நீக்குவதற்கு மாற்றாக, நியூஸ் ஃபீடில் முன்னுரிமை அளிக்கப்போவது இல்லை என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.