

காத்மாண்டு,
நேபாள பெருவெள்ளத்தில் சிக்கி இறந்தவர்களின் உடல்கள் கிடைக்காததால், உருவ பொம்மைகளுக்கு இறுதி சடங்கு செய்யும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
இமயமலையில் ஒரு பகுதியில் உள்ள திபெத்தில் கடந்த மாதம் 26-ந் தேதி ஏற்பட்ட பனிச்சரிவில், போடேகோஷி ஆற்றில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. இந்த இயற்கையின் சீற்றத்தால், நேபாளத்தின் வடக்கு மற்றும் மத்திய மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
பாறைகளை உருட்டிக் கொண்டு, மண், சேறு - சகதியுடன் சீறிப்பாய்ந்த பெருவெள்ளத்தில் சுற்றுலா பயணிகளும், உள்ளூர் மக்களும் சிக்கிக் கொண்டனர். பலர் உயிர் பிழைக்க ஓடியும், கருணையில்லாத பெருவெள்ளம் அவர்களை வாரி சுருட்டிக் கொண்டது.
இதுவரை இந்த பெருவெள்ளத்தில், 1,127 பேர் இறந்துள்ளனர். 12 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், 4 ஆயிரம் பேரை இன்னும் காணவில்லை. மீட்புப் பணிகள் ஒரு பக்கம் நடந்தாலும், பெருவெள்ளம் நிகழ்ந்து 6 நாட்கள் ஆகிவிட்டதால், பலர் இறந்திருக்கலாம் என்றே அஞ்சப்படுகிறது.
இதற்கிடையே, காத்மாண்டுவில் உள்ள பசுபதிநாத் கோவில் வளாகத்தில் இன்று, பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்படாத நிலையில், அவர்களுக்கான இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.
உடல்களுக்கு பதில் வைக்கோலால் செய்யப்பட்ட உருவ பொம்மைகளை பாடைகளில் கட்டி தூக்கிவந்து, அவர்களின் குடும்பத்தினர் இறுதிச் சடங்கு செய்தனர். இது காண்போரை சோகத்தில் மூழ்கச் செய்தது.