‘ஜான்சன் அண்ட் ஜான்சன்’: அமெரிக்க தடுப்பூசியால் நரம்பு கோளாறு

ஜான்சன் அண்ட் ஜான்சன் கொரோனா தடுப்பூசி அரிதான நரம்பு கோளாறுக்கான அபாயத்தை ஏற்படுத்தும் என்று அமெரிக்காவின் எப்.டி.ஏ தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தடுப்பூசி ஒன்றை உருவாக்கி, பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. இந்த தடுப்பூசி ஒற்றை டோஸ் தடுப்பூசி ஆகும். ஆனால் இந்த தடுப்பூசியால் குய்லின் பார் சிண்ட்ரம் என்ற அரிய வகை நரம்புக்கோளாறு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று தெரிய வந்துள்ளது.

இந்த வகை நரம்புக்கோளாறு ஏற்படுகிறபோது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், நரம்பு செல்களை சேதப்படுத்துகிறது, இதனால் தசை பலவீனம் அடைகிறது. சில நேரங்களில் பக்கவாதம் ஏற்படுகிறது. இந்த தகவல்களை அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எப்.டி.ஏ.) வெளியிட்டுள்ளது.

ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியை செலுத்திக்கொண்டவர்களில் சிலருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்பு, தடுப்பூசியை செலுத்திக்கொண்ட 42 நாளில் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் இது ஏற்படுவது மிகவும் அரிதான ஒன்று என்றும் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் கூறுகிறது.

இதுவரை 1 கோடியே 28 லட்சம் பேர் இந்த தடுப்பூசியை செலுத்திக்கொண்டதில் ஏறத்தாழ 100 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன. இவர்களில் 95 சதவீதத்தினர் நிலைமை மோசமாகி ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர். ஒருவர் இறந்தும் விட்டார். பெரும்பாலும் 50 வயது கடந்த ஆண்களுக்கே இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com