பிரஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து பெடரர் விலகல்

தனது விளையாட்டு வாழ்க்கையை நீடிக்கும் பொருட்டு இந்த ஆண்டு பிரஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து விலகியிருக்க பிரபல வீரர் பெடரர் முடிவு செய்து அறிவித்துள்ளார்.
பிரஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து பெடரர் விலகல்
Published on

பாரிஸ்

ஒரு போட்டித் தொடரில் விளையாடுவதற்காக அடுத்து வரும் விளையாட்டுகளிலிருந்து ஒட்டுமொத்தமாக விலக வேண்டிய கட்டாயத்திற்கு உட்படாமல் இருக்கவே இந்த முடிவு என்று அவர் விளக்கமளித்தார். ஏற்கனவே இந்தாண்டு ஆஸ்திரேலிய ஓபன் போட்டி உட்பட மூன்று போட்டிகளில் வெற்றி பெற்ற அவர் நேரடியாக விம்பிள்டன் போட்டியில் விளையாட விரும்புகிறார்.

பெடரரின் பிரதான போட்டியாளரான நடால் இப்போது பிரஞ்சு ஓபனிற்கு முன்பு வேறொரு களிமண் தரைப்போட்டியில் வென்றுள்ளார். புல் தரைப்போட்டியான விம்பிள்டன் போட்டிகளில் நடால் 10 ஆவது முறையாக பட்டத்திற்கு போட்டியிடவுள்ளார். பெடரர் சாதனை எண்ணிக்கையாக 7 முறை விம்பிள்டனில் வென்றுள்ளார்.

இதனிடையே முன்னாள் நெம்பர் ஒன் பெண் வீராங்கனையான மரியா ஷரபோவாவை பிரஞ்சு ஓபன்னில் விளையாட அனுமதிப்பதை நிர்வாகம் விரும்புகிறது என்று கூறப்படுகிறது. தங்களது வருமானத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவை அது எடுத்துள்ளதாகத் தெரிகிறது. போதை குற்றச்சாட்டுகளிலிருந்து விடுபட்ட மரியா ஷரபோவா ஸ்டட்கர்ட் போட்டியில் அரை இறுதிச் சுற்றில் தோல்வியைத் தழுவினார். இப்போது பிரஞ்சு ஓபனில் களமிறங்கவுள்ளார். பெடரர் போட்டியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து நட்சத்திரக் கவர்ச்சியைத் தக்கவைக்க ஷரபோவா விளையாட அழைக்கப்படுவார் என்றே கூறப்படுகிறது. சென்ற ஆண்டில் பிரஞ்சு ஓபன் போட்டிகளைக் காண 413,907 வந்ததாக கூறப்படுகிறது. இந்த முறை பரிசுப் பணமும் 12 சதவீதம் அதிகரிக்கப்பட்டு, 35.98 மில்லியன் யூரோக்களாக இருக்கிறது. இறுதிப்போட்டியில் வெல்பவர்களுக்கு 2.1 மில்லியன் யூரோக்கள் பரிசாக தரப்படும் என்று தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com