

புதுடெல்லி:
ஈரானுக்கும் ஓமனுக்கும் இடையே அமைந்துள்ள ஹார்முஸ் ஜலசந்தி, பாரசீக வளைகுடாவையும் ஓமன் வளைகுடாவையும் இணைக்கும் முக்கிய கடல் வழித்தடமாகும். உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போக்குவரத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு இந்த வழியாக நடைபெற்று வந்தது.அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் காரணமாக இந்தப் பகுதியில் கப்பல் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கப்பல்கள் ஜலசந்தியைக் கடந்து செல்வதற்கு ஈரான் கட்டுப்பாடுகளை விதித்து வருவதுடன், அதற்கான கட்டணங்களையும் கோருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் சர்வதேச கடல் வழித்தடங்களில் சட்டவிரோத கட்டணங்கள், பாரபட்சமான கட்டுப்பாடுகள் மற்றும் முன் அனுமதி பெற வேண்டிய நிபந்தனைகள் விதிக்கப்படுவதை எதிர்ப்பதாக ஐரோப்பிய யூனியன் தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இந்த தீர்மானத்தை 60 நாடுகள் ஆதரித்து உள்ளன. . கடல் வழிப் போக்குவரத்து தொடர்பான ஐ.நா. கடல் சட்ட விதிகளுக்கு இணங்க, கப்பல்கள் தடையின்றி பயணிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச கடல் வழித்தடங்களில் கப்பல்கள் சுதந்திரமாகச் செல்வதை உறுதி செய்யும் நோக்கில், ஐரோப்பிய யூனியன் இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளது. ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகள் 27 மற்றும் ஆஸ்திரேலியா, ஜப்பான், இங்கிலாந்து, கனடா, சிங்கப்பூர் உள்ளிட்ட 33 நாடுகள் என மொத்தம் 60 நாடுகள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தி வரும் நிலையில், இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கப்பல் போக்குவரத்து பாதிப்பு
போருக்கு முன்பு ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நாளொன்றுக்கு சுமார் 125 பெரிய வணிகக் கப்பல்கள் கடந்து சென்றன. ஆனால், தற்போது பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், கப்பல்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் காரணமாக கப்பல்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால் உலக நாடுகளின் எரிசக்தி விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.