ஈராக் நாட்டில் அமெரிக்க படைகளுக்கு கடும் எதிர்ப்பு: ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம்

ஈராக்கில் அமெரிக்க படைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக் கணக்கானோர் போராட்டம் நடத்தினர்.
ஈராக் நாட்டில் அமெரிக்க படைகளுக்கு கடும் எதிர்ப்பு: ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம்
Published on

பாக்தாத்,

ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் அந்த நாட்டு ராணுவத்துக்கு உதவியாக அமெரிக்க படைகள் அங்கு களம் இறங்கின. தற்போது ஈராக்கில் 5 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் முகாமிட்டு இருக்கிறார்கள்.

இந்தநிலையில் அண்மைகாலமாக அங்கு அமெரிக்க படைகள் தொடர்ச்சியாக தாக்குதல்களுக்கு உள்ளாகி வந்தன. ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் இந்த தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது.

இந்த சூழலில் இந்த மாத தொடக்கத்தில் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார்.

இந்த தாக்குதலில் ஈராக் துணை ராணுவ தளபதி அபு மஹதி அல் முகந்திசும் பலியானார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

குறிப்பாக ஈராக்கில் அமெரிக்காவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதன் விளைவாக அங்குள்ள அமெரிக்க படைகளை உடனடியாக வெளியேற்ற வேண்டுமென அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் அமெரிக்காவோ ஈராக்கில் இருந்து தங்கள் நாட்டு வீரர்கள் வெளியேற மாட்டார்கள் என்று உறுதியாக கூறியது. மேலும் படைகளை வெளியேற்ற ஈராக் வற்புறுத்தினால் அந்த நாட்டின் கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என பகிரங்க மிரட்டல் விடுத்தது.

இந்தநிலையில் அமெரிக்க படைகளை உடனடியாக வெளியேற்ற வலியுறுத்தி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த வேண்டுமென ஷியா பிரிவு முஸ்லிம் அமைப்பின் மதகுரு முக்ததா அல் சதார் அழைப்பு விடுத்தார்.

அதன் பேரில் நேற்று தலைநகர் பாக்தாத்தின் மத்திய பகுதியில் உள்ள 2 முக்கிய இடங்களில் ஆயிரக்கணக் கான மக்கள் வீதிகளில் இறங்கி அமெரிக்க படைகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாக்தாத்தின் மத்திய பகுதியில் உள்ள அல் ஹவுரியா சதுக்கத்தில் இருந்து வெளிநாட்டு தூதரகங்கள் அமைந்துள்ள பசுமை மண்டலம் நோக்கி ஆயிரக்கணக்கானோர் பேரணியாக சென்றனர்.

இந்த பேரணியில் ஏராளமான பெண்களும் கலந்து கொண்டனர். அவர்கள் அமெரிக்காவுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பியபடி அணிவகுத்து சென்றனர். ஈரான் ஆதரவு பெற்ற ஷியா பிரிவு படைவீரர்கள் போராட்டக்காரர்களுக்கு பாதுகாப்புக்காக உடன் சென்றனர்.

இதேபோல் பாக்தாத்தில் உள்ள முக்கியமான பல்கலைக் கழகத்தின் முன்பு ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அமெரிக்கா வேண்டாம், இஸ்ரேல் வேண்டாம், ஊழல் அரசுகள் எதுவும் ஈராக்கில் இருக்க வேண்டாம் என பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

பேரணி மற்றும் போராட்டத்தில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நிகழவில்லை என்றும், அமைதியான முறையில் நடந்து முடிந்ததாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com