மதுபோதையில் குத்தாட்டம் போட்ட பின்லாந்து பிரதமருக்கு போதை மருந்து சோதனை!

பின்லாந்து பிரதமர் தனது வீட்டில் நண்பர்களுடன் சேர்ந்து நடனம் ஆடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சையை கிளப்பியது.
மதுபோதையில் குத்தாட்டம் போட்ட பின்லாந்து பிரதமருக்கு போதை மருந்து சோதனை!
Published on

ஹெல்சின்கி,

பின்லாந்து நாட்டில் ஆளும் சோசியல் டெமாக்ரடிக் கட்சியின் பிரதமராக 36 வயது பெண்ணான சன்னா மரின் பதவி வகித்து வருகிறார். கடந்த 2019-ம் ஆண்டு தனது 34 வயதில் பின்லாந்தின் பிரதமராக பதவியேற்றதன் மூலம் உலகின் இளம் வயது பிரதமர் என்கிற பெருமையை பெற்றவர் இவர்.

இந்த நிலையில் சன்னா மரின் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து அவரது பிரதமர் பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டது. சன்னா மரின் தனது வீட்டில் நண்பர்களுடன் சேர்ந்து உற்சாகமாக பாடி, நடனம் ஆடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது.

வீடியோவை பார்த்த பலரும் சன்னா மரின் போதைப்பொருளை உட்கொண்டு நண்பர்களுடன் குத்தாட்டம் போட்டதாக குற்றம் சாட்டி கடுமையாக விமர்சனம் செய்தனர். குடிமக்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டியே நாட்டின் பிரதமரே இவ்வாறு நடந்து கொள்வதா என எதிர்க்கட்சிகள் சாடின.

அதுமட்டும் இன்றி சன்னா மரின் போதைப்பொருளை பயன்படுத்தினரா என்பதை பரிசோதிக்க வேண்டும் எனவும், பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்ட அவர் பதவி விலக வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த சர்ச்சையால் சன்னா மரினின் பிரதமர் பதவிக்கும், ஆளும் சோசியல் டெமாக்ரடிக் அரசுக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனினும் விமர்சனங்களுக்கு பதிலளித்து பிரதமர் சன்னா மரின் தான் எந்த போதைப்பொருளையும் பயன்படுத்தவில்லை என்றும் சட்டத்துக்கு புறம்பாக எதையும் செய்யவில்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.

அவர் பேசுகையில், "போதைப்பொருள் தொடர்பாக பரிசோதனை நடத்துவதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அதேபோல் எனது நடத்தையை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். இப்போது இருப்பதுபோலவே இருக்க விரும்புகிறேன். அது ஏற்றுக்கொள்ளப்படும் என்று நம்புகிறேன்" என்றார்.

இதைத் தொடர்ந்து போதை மருந்து சோதனைக்கு அவர் தாமாக முன்வந்தார். அவருக்கு நேற்று போதை மருந்து சோதனை நடத்தப்பட்டது. இதன் முடிவு ஒரு வாரத்தில் தெரியவரும். இந்த முடிவின் அடிப்படையில் சானா மேரினின் அரசியல் எதிர்காலம் அமையும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்து உள்ளனர்.

முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா தொற்று விதிமுறைகளை மீறி சன்னா மரின் இரவு நேர கேளிக்கை விடுதிக்கு சென்று பொழுதை கழித்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியும், இதற்காக அவர் மன்னிப்பு கோரியதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com