வங்காளதேசத்தில் மின் விசிறி தொழிற்சாலையில் தீ விபத்து - 10 பேர் உடல் கருகி பலி

வங்காளதேசத்தில் மின் விசிறி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 10 பேர் உடல் கருகி பலியாகினர்.
வங்காளதேசத்தில் மின் விசிறி தொழிற்சாலையில் தீ விபத்து - 10 பேர் உடல் கருகி பலி
Published on

டாக்கா,

வங்காளதேச தலைநகர் டாக்காவின் புறநகர் பகுதியான காசிப்பூரில் மின்விசிறிகள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை இந்த தொழிற்சாலையில் தொழிலாளர்கள் வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு திடீரென தீப்பிடித்தது. இதனால் பதறிப்போன தொழிலாளர்கள் அலறியடித்துக்கொண்டு தொழிற்சாலையை விட்டு வெளியே ஓடினர்.

ஆனால் மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ, சற்று நேரத்தில் தொழிற்சாலை முழுவதும் பரவி நாலாபுறமும் சூழ்ந்து கொண்டது. இதனால் தொழிலாளர்கள் வெளியே வரமுடியாமல் உள்ளே சிக்கிக்கொண்டனர்.

தீவிபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் தீயின் கோரப்பிடியில் சிக்கி 10 பேர் உடல் கருகி பலியாகினர். மேலும் பலர் பலத்த தீக்காயம் அடைந்தனர்.

இது வங்காளதேசத்தில் ஒரு வாரத்துக்குள் நடந்த 2-வது மோசமான தீவிபத்து சம்பவமாகும். கடந்த புதன்கிழமை டாக்கா அருகே கெரானிகஞ்ச் என்ற இடத்தில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 15 பேர் உடல் கருகி பலியானது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com