லாஸ் ஏஞ்சல்சில் மீண்டும் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் வெளியேற்றம்


லாஸ் ஏஞ்சல்சில் மீண்டும் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் வெளியேற்றம்
x

File image

இந்த காட்டுத்தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

லாஸ் ஏஞ்சல்ஸ்,

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் அண்மையில் காட்டுத்தீ பரவியது. இதுவரை 40க்கும் மேற்பட்டோர் இந்த தீயில் உயிரிழந்துள்ளனர். 12,000 கட்டிடங்கள் உள்பட பல கட்டுமானங்கள் சேதமடைந்தன. 1.80 லட்சம் பேர் வேறு இடத்தில் தங்கவைக்கப்பட்டார்கள். 163 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு தீக்கிரையானது. 200 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் (ரூ.17,29,581 கோடி) அதிகமான பொருட்கள் சேதமடைந்தது.

இந்நிலையில், சற்றே தணிந்த காட்டுத்தீ தற்போது மீண்டும் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் வடக்குப் பகுதியில் தீ பரவி வருகிறது. இப்போது மூண்டுள்ள காட்டுத்தீ 21 சதுர கிலோ மீட்டர் அளவில் எரிந்து வருகிறது. இதனால் விண்ணை முட்டும் அளவுக்கு கரும்புகை சூழ்ந்துள்ளது. இந்த காட்டுத்தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள், விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மேலும் அபாயத்தை எதிர்நோக்கி உள்ள அந்த பகுதிகளில் இருந்து 30 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறை தலைவர் ராபர்ட் ஜென்சன் கூறுகையில், "கடந்த முறை ஈட்டன், பாலிஷேட்ஸ் பகுதியில் காட்டுத்தீயால் உயிர்ச்சேதம் ஏற்பட்டது. அந்த படிப்பினையால் இம்முறை வடக்குப் பகுதியில் தீ பரவியவுடனேயே பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தினோம். முந்தைய பாதிப்பை சுட்டிக்காட்டியே மக்களை உடனடியாக வெளியேற உத்தரவிட்டோம்" என்றார்.

மீண்டும் இவ்வளவு வீரியமாகக் காட்டுத்தீ ஏற்படக் காரணம் இதுதான் என உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும் காற்றில் குறைந்த ஈரப்பதம், பலமான காற்று ஆகியன மீண்டும் காட்டுத் தீ பரவக் காரணம் என்று கூறப்படுகிறது.


Next Story