

வாஷிங்டன்,
அமெரிக்காவில் சுமார் 4 தசாப்தங்களாக அழிந்துவிட்டதாகக் கருதப்பட்ட அரிய வகை மின்மினிப் பூச்சி இனம், 43 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கடந்த 1983-ம் ஆண்டிற்குப் பிறகு 'சிமிலர் பயர்பிளை' எனப்படும் மின்மினிப் பூச்சிகள் தென்படாமல் போனது. இந்த நிலையில் இந்த மின்மினிப் பூச்சிகள், இந்த வருடம் 2026-ல் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் அமெரிக்காவின் 2 மாநிலங்களில் அடுத்தடுத்துப் பதிவு செய்யப்பட்டது.
முதலில் மே மாதம் வர்ஜீனியா மாநிலத்தின் ஆஷ்பர்ன் பகுதியில் 'அல்ஜோஷா நெர்ன்' என்ற குடிமகன் விஞ்ஞானியால் இது அடையாளம் காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஜூன் 3-ம் தேதி டெலாவேர் மாநிலத்தில் உள்ள பிராண்டிவைன் க்ரீக் மாநிலப் பூங்காவின் புல்வெளியில், டெலாவேர் மாநிலப் பல்கலைக்கழக ஆய்வாளர் கிறிஸ்டோபர் ஹெக்சர் சுமார் 8 முதல் 12 மின்மினிப் பூச்சிகளை நேரில் கண்டறிந்தார்.
இரவு நேரத்தில் இந்த பூச்சிகள் வெளியிட்ட தனித்துவமான ஒளிகளே இவற்றைக் கண்டறிய உதவியது. 10 முதல் 20 முறை விரைவாக அம்பர் நிறத்தில் ஒளிர்ந்துவிட்டு, சிறிது இடைவெளி விடும் இதன் தனிச்சிறப்பான ஒளி வடிவத்தை ஆய்வாளர் ஹெக்சர் கவனித்தார். பின்னர் நுண்ணோக்கி மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இது 43 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன அதே இனம்தான் என்பது அறிவியல் பூர்வமாக உறுதி செய்யப்பட்டது.
நகரமயமாக்கல் மற்றும் செயற்கை விளக்குகளின் ஒளியால் மின்மினிப் பூச்சிகள் அழிந்து வரும் சூழலில், நீர்நிலைகளுக்கு அருகில் இயற்கையாக பராமரிக்கப்பட்ட புல்வெளிகளே இவை தப்பிப் பிழைக்க காரணமாக இருந்துள்ளன. இந்த கண்டுபிடிப்பு, அமெரிக்கா மற்றும் கனடாவில் இன்னும் காணாமல் போனதாகக் கருதப்படும் சுமார் 28 வகை மின்மினிப் பூச்சிகளைத் தேடும் பணிகளுக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.