

லாஸ் ஏஞ்சல்ஸ்,
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சீன தூதரகம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் அதிகாலை சுமார் 6 மணியளவில் மர்ம நபர் ஒருவர் தனது காரில் வந்தார். பின்னர் அவர் தனது துப்பாக்கியை எடுத்து தூதரகத்தை நோக்கி சரமாரியாக சுட்டார். இதில் தூதரகத்தின் முகப்பு மற்றும் ஜன்னல்கள் சேதமடைந்தன.
சுமார் 17 ரவுண்டுகள் சுட்ட அவர் பின்னர் தனது காரில் ஏறி, தன்னைத்தானே சுட்டுக்கொண்டார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் அங்கேயே உயிரிழந்தார். அதிகாலை நேரம் என்பதால் தூதரகம் திறக்கப்படாததால் சம்பவத்தின் போது ஊழியர்கள் யாரும் அங்கு இல்லை. இதனால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
இந்த சம்பவம் ஆழ்ந்த கவலை அளிப்பதாக சீன தூதரகம் தகவல் வெளியிட்டு உள்ளது. தங்கள் தூதரகத்துக்கும், அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கும் பாதுகாப்பை பலப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்க அரசை வலியுறுத்தியுள்ள சீன அரசு, இந்த சம்பவத்துக்கான காரணத்தை விளக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.
லாஸ் ஏஞ்சல்சில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கான காரணம் குறித்து அமெரிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.