

இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானின் தென்மேற்கே அமைந்த இயற்கை வளங்கள் நிறைந்த பெரிய மாகாணம் பலுசிஸ்தான். அங்கு வாழும் ஒரு பகுதி மக்கள் பாகிஸ்தான் அரசிடம் இருந்து தங்களுக்கு விடுதலை வேண்டும் என போராடி வருகின்றனர். மேலும், பலுச் விடுதலைப்படை அமைப்பை சேர்ந்தவர்கள் வெடிகுண்டு தாக்குதல் உள்ளிட்ட பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் தலிபான்களின் கிளை அமைப்பான தெஹ்ரிக்-இ-தலிபான் அமைப்பை சேர்ந்தவர்கள் பலுசிஸ்தானில் பதுங்கி இருப்பதாக பாகிஸ்தான் அரசு குற்றம்சாட்டி வருகிறது. இதையடுத்து, பாகிஸ்தான் ராணுவம் பலுசிஸ்தானில் தொடர்ந்து பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், பலுசிஸ்தானில் நேற்று பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் நடத்திய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின்போது, ராணுவ வீரர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை வெடித்தது. இந்த மோதலில் 15 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், 92 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
இதே போல், நேற்று முன்தினம் பலுசிஸ்தானில் உள்ள பஞ்ஜ்குர் மற்றும் ஹர்னாய் ஆகிய மாவட்டங்களில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 41 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதன் மூலம், பலுசிஸ்தானில் கடந்த 2 நாட்களில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 133 ஆக அதிகரித்துள்ளது.
பலுசிஸ்தானில் சமீபத்திய ஆண்டுகளில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. அங்கு கடந்த ஆண்டு 956 பேர் பயங்கரவாத தாக்குதல்களில் உயிரிழந்துள்ளனர். இது முந்தைய ஆண்டை விட சுமார் 22 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.