வயதானோர் ஒரு ‘டோஸ்’ போட்டுக்கொண்டாலே பைசர், அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசி 60 சதவீதம் பாதுகாப்பு

வயதானோர் ஒரு ‘டோஸ்’ போட்டுக்கொண்டாலே பைசர், அஸ்ட்ரா ஜெனோகா தடுப்பூசி 60 சதவீதம் பாதுகாப்பானது என்று ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
வயதானோர் ஒரு ‘டோஸ்’ போட்டுக்கொண்டாலே பைசர், அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசி 60 சதவீதம் பாதுகாப்பு
Published on

லண்டன்,

கொரோனாவுக்கு எதிராக அமெரிக்காவின் பைசர், இங்கிலாந்தின் அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசிகள் பல நாடுகளில் பயன்பாட்டில் உள்ளன. இவற்றின் செயல்திறன் பற்றிய நிஜ உலக தரவுகளை பராமரிப்பு இல்லங்களில் பெறும் ஆய்வில் இங்கிலாந்து நாட்டின் லண்டன் பல்கலைக்கழக கல்லூரி ஆராய்ச்சியளார்கள் ஈடுபட்டனர்.

கொரோனா வைரஸ் பரவல், தொற்றின் விளைவுகள், நீண்ட கால பராமரிப்பு இல்லங்களில் தங்கியுள்ளோர், பணிசெய்வோர் 65 வயதும், அதற்கு மேற்பட்ட வயதுள்ள நிலையில் அவர்களுக்கு ஏற்படுகிற நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றை ஆராய்ந்தனர்.

தற்போது இங்கிலாந்தில் ஆதிக்கம் செலுத்தும் டெல்டா வகை வைரஸ் வெடிப்பதற்கு முன்பாக இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதுபற்றிய தகவல்கள், தி லேன்செட் தொற்று நோய்கள் பத்திரிகையில் இடம் பெற்றுள்ளன. அதன் முக்கிய தகவல்கள் வருமாறு:-

310 பராமரிப்பு இல்லத்தில் தங்கியிருப்போரில் 10 ஆயிரத்து 412 பேர் ஆய்வில் பயன்படுத்தப்பட்டனர். இவர்கள் 65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர். சராசரி வயது 86. இவர்களில் 70 சதவீதத்தினர் பெண்கள். 1,155 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

ஆய்வுகால கட்டத்தில் இவர்களில் 9,160 பேர் (88 சதவீதத்தினர்) தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக்கொண்டனர். அவர்களில் 67 சதவீதத்தினர் அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசியும், 33 சதவீதத்தினர் பைசர் தடுப்பூசியும் செலுத்திக்கொண்டனர்.

கடந்த ஆண்டின் டிசம்பர்-8 மற்றும் இந்த ஆண்டின் மார்ச் 15-ந்தேதிகளுக்கு இடையே 36 ஆயிரத்து 352 ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. 1,335 மாதிரிகளில் தொற்று பாதிப்பு உறுதியானது. இவர்களில் 713 பேர் தடுப்பூசி செலுத்தாதோர். 612 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டோர் ஆவர்.

தடுப்பூசி செலுத்தியோரில் 28-34 நாட்களுக்கு பிறகு தொற்று ஆபத்து 56 சதவீதம் குறைவாக இருந்தது. 35-48 நாட்களில் 62 சதவீதம் குறைவாக இருந்தது.

அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசி போட்டு 35-48 நாளில் 68 சதவீதம் தொற்று ஆபத்து குறைவாக இருந்தது. பைசருக்கு 65 சதவீதம் தொற்று ஆபத்து குறைவு.

ஒற்றை டோஸ் அஸ்ட்ரா ஜெனேகா அல்லது பைசர் தடுப்பூசி போட்டுக்கொள்கிற வயதானோருக்கு கொரோனா பாதிப்பு வாய்ப்பு குறைவாக உள்ளது. அதாவது தொற்றில் இருந்து 60 சதவீதம் பாதுகாப்பு கிடைக்கிறது.

அதே நேரததில் தடுப்பூசி செலுத்தி 4 வாரங்களுக்கு பிறகு நோய் தொற்று அபாயத்தை அகற்றாது. இது பராமரிப்பு இல்லங்களில் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த மருந்து அல்லாத நடவடிக்கைகளின் தொடர்ச்சியான முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com