

ஏமனில் அதிபர் மன்சூர் ஹாதி தலைமையிலான அரசு படைக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. நாட்டின் பல்வேறு நகரங்களை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அரசு படைகளுக்கு எதிராக தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள அரசு படையின் வசம் இருக்கும் ஒரே ஒரு நகரமான மாரிப் நகரை தங்களின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர ஹவுதி கிளர்ச்சியாளர்கள் போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் மாரிப் நகரில் உள்ள ராணுவ வளாகத்தை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை ஒன்றை வீசினர். ஆனால் அந்த ஏவுகணை ராணுவ வளாகம் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து வெடித்து சிதறியது. இதில் அப்பாவி மக்கள் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 34 பேர் படுகாயமடைந்தனர்.