ஒபாமா உள்ளிட்ட பிரபலங்களின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்ட விவகாரம்: 3 பேர் மீது வழக்குப்பதிவு

ஒபாமா உள்ளிட்ட பிரபலங்களின் டுவிட்டர் கணக்கை ஹேக் செய்த விவகாரத்தில் 17 வயது சிறுவன் உள்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒபாமா உள்ளிட்ட பிரபலங்களின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்ட விவகாரம்: 3 பேர் மீது வழக்குப்பதிவு
Published on

வாஷிங்டன்,

உலகமெங்கும் குறுந்தகவல்களை பதிவிடுவதற்காக டுவிட்டர் சமூக வலைத்தளம் பயன்படுத்தப்படுகிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வரையில் அரசியல், விளையாட்டு, சினிமா, தொழில், வர்த்தகம் என பல துறை பிரபலங்களும் டுவிட்டர் கணக்குகளை வைத்துக்கொண்டு, அவற்றில் தினந்தோறும் பதிவிட்டு வருகிறார்கள். இப்படிப்பட்ட பிரபலங்களை கோடிக்கணக்கானோர் பின்தொடர்கின்றனர்.

இந்த நிலையில் அமெரிக்காவின் பிரபலங்களான மைக்ரோசாப்ட் நிறுவன அதிபர் பில் கேட்ஸ், ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி நிறுவனத்தின் தலைவர் எலன் மஸ்க், அமேசான் நிறுவனர் ஜெப் பெஸோஸ், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா, வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக களம் இறங்கும் ஜோ பிடன், ராப் பாடகர் கன்யே வெஸ்ட் உள்ளிட்டவர்களின் டுவிட்டர் கணக்குகள் ஹேக் இந்த மாத துவக்கத்தில் ஹேக் செய்யப்பட்டன.

இந்த பிரபலங்களின் டுவிட்டர் கணக்குகளில் அவ்வாறு சட்ட விரோதமாக, திருட்டுத்தனமாக நுழைந்த நபர்கள் அவற்றில் நன்கொடைகளை பிட்காயின் வடிவத்தில் அனுப்புமாறு வேண்டுகோள் விடுத்தனர். டுவிட்டர் கணக்குகள் சட்டவிரோதமாக ஹேக் செய்யப்பட்டிருப்பதை அறிந்த உடனேயே, இந்த சட்ட விரோத செயலில் ஈடுபட்ட நபர்களின் செயல்களை கட்டுப்படுத்த உடனடியாக அந்த நிறுவனத்தின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த ஹேக்கிங் ரஷியா அல்லது சீனாவால் நடைபெற்றிருக்கலாம் என அமெரிக்கா சந்தேகம் எழுப்பியது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்றுவந்தது. இந்த விசாரணையில் பிரபலங்களை ஹேக் செய்து அதில் பிட்காய்ன் தொடர்பான தகவல்களை வெளியிட்டது. 3 பேர் கொண்ட இளைஞர்கள் குழு என தெரியவந்தது.

புளோரிடாவை சேர்ந்த நிமா பாசீல் (22), இங்கிலாந்தை சேர்ந்த ஷேப்பர்டு (19) ஆகிய இருவரும் டுவிட்டர் ஹேக்கிங்கில் ஈடுபட்டுள்ளனர். மூன்றாவது நபரான 17 வயது நிரம்பிய சிறுவன் தான் இந்த ஹேக்கிங்கில் மூளையாக செயல்பட்டுள்ளான் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கிராகாம் கிளார் என்ற பெயருடைய 17 வயது சிறுவன் தான் இந்த மிகப்பெரிய ஹேக்கிங்கின் முக்கிய காரணம் என தெரியவந்தது. இதையடுத்து, 3 பேர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com