

பாரீஸ்
பிரான்ஸ் நாட்டின் இவியான் நகருக்கு பிரதமர் மோடி இன்று சென்றடைந்து உள்ளார். அந்நாட்டில் நடைபெற உள்ள ஜி7 உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்கிறார். இதுபற்றி பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் வலைதள பதிவில், ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் நாட்டின் இவியான் நகருக்கு வந்துள்ளேன்.
உலக தலைவர்களை சந்தித்து, உலகளாவிய விவகாரங்களை பற்றிய பார்வைகளை பரிமாறி கொள்ள ஆவலாக காத்திருக்கிறேன் என்று பதிவிட்டு உள்ளார். நீடித்த மற்றும் வளம் நிறைந்த பூமிக்காக கூட்டு முயற்சிகளை நவீனப்படுத்துவதில் இந்தியா தொடர்ந்து உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
அதற்கு முன் அவர், சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகருக்கு சென்றார். அவரை ஜெனீவா விமான நிலையத்தில் அந்நாட்டு ஜனாதிபதியான கை பார்மெலின் மற்றும் அவருடைய மனைவி கரோலின் மெரோட்டோ நேரில் சென்று வரவேற்றனர். அதற்கு முன்பு அவர் சுலோவேகியா நாட்டுக்கு சென்றார்.
சுலோவேகியா நாட்டுக்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். அவருடைய இந்த பயணத்தின்போது, புலம்பெயர்தல், டிஜிட்டல் தொழில் நுட்பம் மற்றும் பாதுகாப்பு உள்பட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுப்படுத்தும் வகையில் 11 ஒப்பந்தங்கள் உறுதி செய்யப்பட்டன.