முதல் முறையாக 2022-ம் ஆண்டு இந்தியாவில் ஜி-20 உச்சி மாநாடு - பிரதமர் மோடி அறிவிப்பு

ஜி-20 உச்சி மாநாடு முதல் முறையாக இந்தியாவில் 2022-ம் ஆண்டு நடைபெறும் என பிரதமர் மோடி அறிவித்து உள்ளார்.
முதல் முறையாக 2022-ம் ஆண்டு இந்தியாவில் ஜி-20 உச்சி மாநாடு - பிரதமர் மோடி அறிவிப்பு
Published on

பியுனோஸ் அயர்ஸ்,

உலக அளவில் மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்டிருக்கும் முதல் 20 நாடுகள் இணைந்து ஜி-20 என்ற பெயரில் கூட்டமைப்பை உருவாக்கி இருக்கின்றன. இந்தியாவும் அங்கம் வகிக்கும் இந்த கூட்டமைப்பின் உச்சி மாநாடு ஆண்டுதோறும் ஏதாவது ஒரு உறுப்பு நாட்டில் நடந்து வருகிறது.

உலகின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 90 சதவீதத்தையும், 80 சதவீத வர்த்தகத்தையும் கொண்டிருக்கும் இந்த நாடுகள், உலக மக்கள் தொகையில் 3-ல் இரண்டு பங்கையும், ஒட்டுமொத்த நிலப்பரப்பில் சுமார் பாதியளவையும் கொண்டிருக்கின்றன.

அப்படி முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டை இந்தியா இதுவரை நடத்தியது இல்லை. ஆனால் 2022-ம் ஆண்டு நடைபெறும் மாநாட்டை இந்தியா நடத்துவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. இந்தியா சுதந்திரம் பெற்ற 75-வது ஆண்டில், இந்த மாநாட்டை நடத்துவது கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது.

அர்ஜென்டினாவின் பியுனோஸ் அயர்ஸ் நகரில் நடைபெற்ற 13-வது ஜி-20 மாநாட்டின் இறுதி நிகழ்வில் பேசும்போது, பிரதமர் மோடி இந்த தகவலை வெளியிட்டார். இந்த வாய்ப்பை விட்டு கொடுத்ததற்காக இத்தாலிக்கு அவர் நன்றியும் தெரிவித்தார்.

பின்னர் இது குறித்து தனது டுவிட்டர் தளத்தில் அவர் கூறுகையில், இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளை 2022-ல் நிறைவு செய்கிறது. சிறப்பு மிக்க அந்த ஆண்டில் ஜி-20 நாடுகளின் தலைவர்களை வரவேற்பதற்கு இந்தியா ஆர்வமாக இருக்கிறது. உலகின் வேகமாக வளரும் பொருளாதாரத்தை கொண்டிருக்கும் இந்தியாவுக்கு வாருங்கள். இந்தியாவின் வளமான வரலாறு மற்றும் பன்முகத்தன்மையை தெரிந்து கொள்வதுடன், அன்பான விருந்தோம்பலையும் உணர்ந்து கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டு இருந்தார்.

ஜி-20 மாநாட்டின் இறுதி நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் மோடி, மேலும் பல்வேறு அம்சங்கள் குறித்து பேசினார். குறிப்பாக உலக பொருளாதாரம் தற்போது அனுபவித்து வரும் சவால்களை சுட்டிக்காட்டிய அவர், கச்சா எண்ணெய் விலையில் ஸ்திரத்தன்மையை வலியுறுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

இந்த மாநாட்டுக்கு இடையே பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரானை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது இருதரப்பு உறவு மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

இந்த சந்திப்பு குறித்து தனது டுவிட்டர் தளத்தில் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்து இருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com