

வாஷிங்டன் டி.சி.
ஹார்மூஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து பாதுகாப்பிற்காக ஈரான் மீது அமெரிக்கா புதிதாக தாக்குதல் நடத்தியுள்ளது.
ஈரானுக்கு எதிராக புதிய ராணுவ தாக்குதல்களை அமெரிக்கா அதிகரித்து உள்ளது. இதுபற்றி அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒரு பிரிவான ராணுவ அதிரடி படையான சென்ட்காம் வெளியிட்ட செய்தியில், ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியை எளிதில் கடந்து செல்லும் வகையில், வர்த்தக கப்பல்களின் போக்குவரத்து பாதுகாப்பிற்காகவும் மற்றும் கடல்சார் ஊழியர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை தடுத்து நிறுத்தும் நோக்கிலும் ஈரானுக்கு எதிராக அதிகளவிலான தாக்குதல்களை அமெரிக்க படை தொடங்கியுள்ளது.
ஈரானிய படைகளின் திறனை குறைக்கும் வகையில், பாதுகாப்பு படை தளபதியின் உத்தரவின்பேரில் இந்த தாக்குதல் நடத்தப்படுகிறது என தெரிவித்து உள்ளது. இதன்படி, ஈரானின் தெற்கு நகரங்களான ஜாஸ்க், பந்தர் அப்பாஸ் மற்றும் சிரிக் ஆகிய 3 முக்கிய நகரங்களில் குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கான சத்தம் கேட்டது.
ஈரானுக்கு எதிராக நேற்று முன்தினம் 3-வது சுற்று தாக்குதல்களை அமெரிக்கா நடத்தி முடித்துள்ளது. ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் வர்த்தக கப்பல் ஒன்றை தாக்கியதற்கு பொறுப்பேற்க செய்யும் வகையில் ஈரானிய படைகளுக்கு எதிராக இந்த தாக்குதல் நடந்துள்ளது.
இதன்படி, ஈரானின் 140 ராணுவ இலக்குகள் மீது துல்லிய தாக்குதல் நடந்தது. நிலம் மற்றும் கடல்வழி போர் விமானம், டிரோன்கள் மற்றும் கடற்படை கப்பல்கள் உதவியுடன் இந்த தாக்குதல் நடந்துள்ளது என அமெரிக்காவின் பாதுகாப்பு படை தெரிவித்து உள்ளது.
இந்த சூழலில், நேற்று மற்றொரு தாக்குதலை அமெரிக்கா நடத்தியுள்ளது. இதனை தொடர்ந்து, ஹார்மூஸ் ஜலசந்தி திறந்தே உள்ளது. அதற்கேற்ப தாக்குதல் நடத்தியவர்களை நேற்றிரவு நாங்கள் விரட்டியடித்து விட்டோம் என்று டிரம்ப் கூறினார்.
ஈரான் நாட்டுக்கு எதிரான அமெரிக்காவின் தாக்குதல் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இதற்கு ஈரானை அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் செல்லும் கப்பல்களை ஈரான் தாக்கியது என தெரிவித்தது.
எனினும், ஈரானின் ஐ.ஆர்.ஐ.பி. என்ற அரசு ஊடகம் வெளியிட்ட செய்தியில், ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில், ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவதற்கு முன்பிருந்த சூழல் இன்னும் திரும்பவில்லை.
இந்த ஜலசந்தி வழியே செல்லக்கூடிய அனைத்து கப்பல்களும், ஈரான் அறிவித்த கடல் வழியிலேயே பயணிக்க வேண்டும். அப்படி இல்லையெனில், அந்த கப்பல்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்படாது என்று தெரிவித்தது. இது உலக நாடுகளை அதிர்ச்சியில் தள்ளியுள்ளது.
இதனால், ஆத்திரமுற்ற அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சமீபத்தில், துருக்கியின் அங்காரா நகரில் நடந்த நேட்டோ உச்சி நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும்போது, ஈரானுடனான போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது என திடுக்கிடும் அறிவிப்பை வெளியிட்டார்.
இதனால் அமெரிக்கா-ஈரான் இடையே மீண்டும் போர் பதற்றம் அதிகரித்து உள்ளது. இரு நாடுகளுக்கு இடையே போர் ஏற்படுவதற்கான பதற்றம் அதிகரித்து காணப்பட்ட சூழலில், மேற்காசிய பகுதியில் தன்னுடைய தலையீட்டை நிறுத்தி கொள்ளும் வரை ஹார்மூஸ் ஜலசந்தி பகுதி மூடப்படுகிறது என்று ஈரான் நேற்று காலை திடீரென்று அறிவித்தது.
இதுபற்றி அந்நாட்டின் ஊடகம் வெளியிட்டு உள்ள செய்தியில், அடுத்த உத்தரவு வரும் வரை ஹார்மூஸ் ஜலசந்தி மூடப்படும். மேற்காசிய பகுதியில் அமெரிக்காவின் தலையீடு நிறுத்தப்படும் வரை தொடர்ந்து ஜலசந்தி பகுதி மூடப்பட்டு இருக்கும். எந்த கப்பலுக்கும் இந்த வழியே கடந்து செல்ல அனுமதி கிடையாது என தெரிவித்து உள்ளது.
அந்நிய சக்திகளின் சட்டவிரோத குறுக்கீட்டை தொடர்ந்து பாதுகாப்பு சூழலை முன்னிட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என்று ஈரான் புரட்சிகர காவல் படை வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது. இதனால், எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லப்படும் சரக்கு கப்பல்கள் தேங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.