

காபூல்,
ஆப்கானிஸ்தான் நாட்டில் 2001-ம் ஆண்டு தொடங்கிய போரை முடிவுக்கு கொண்டு வருவதில் அமெரிக்கா தீவிரமாக உள்ளது. இது தொடர்பாக தலீபான் பயங்கரவாதிகளுடன் அமெரிக்கா நேரடி பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.
அதே நேரத்தில் நாங்கள் தாக்குதல்களை நிறுத்த மாட்டோம் என தலீபான் பயங்கரவாதிகள் அறிவித்து, ஆப்கானிஸ்தானில் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அங்குள்ள பால்க் மாகாணத்தில், சாம்டால் மாவட்டத்தில் பதுங்கி இருந்த தலீபான் பயங்கரவாதிகளை குறிவைத்து உள்நாட்டு படைகள் நேற்று முன்தினம் அதிரடி தாக்குதல் நடத்தின.
இந்த தாக்குதலில் 12 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 17 பேர் படுகாயம் அடைந்தனர். அதே நேரத்தில் உள்ளூர் மக்களுக்கோ, படையினருக்கோ எந்த பாதிப்பும் இல்லை.
இந்த தகவல்களை ஆப்கானிஸ்தான் வடக்கு பிராந்திய ராணுவ செய்தி தொடர்பாளர் முகமது ஹனிப் ரேஜாய் நேற்று வெளியிட்டார்.