அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு தோல் புற்றுநோய் அறுவை சிகிச்சை

ஜோ பைடனின் நெற்றியில் தோல் புற்றுநோய் செல்கள் அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு தோல் புற்றுநோய் அறுவை சிகிச்சை
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடன்(வயது 82). கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம், அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்றார். அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலிலும் ஜோ பைடன் போட்டியிடுவார் என அறிவிப்பு வெளியானது.

ஆனால் வயோதிகம் உள்ளிட்ட காரணங்களால் அவரை அதிபர் வேட்பாளராக களமிறக்க அவரது சொந்த கட்சியான ஜனநாயக கட்சியில் இருந்தே எதிர்ப்புகள் கிளம்பின. இதையடுத்து அதிபர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து ஜோ பைடன் விலகினார். அவருக்கு பதில் கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

இதனிடையே, கடந்த மார்ச் மாதம் ஜோ பைடனுக்கு தீவிர புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாகவும், அவரது எலும்புகள் வரை புற்றுநோய் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. அந்த சமயத்தில் ஜோ பைடன் தனது சமூக வலைதள பக்கத்தில், புற்றுநோய் அனைவரையும் தொட்டுவிடுகிறது. உங்களில் பலரைப் போல், என் மனைவி ஜில் பைடனும், நானும் கடினமான நேரத்தில் உறுதியாக இருக்க கற்றுக்கொண்டோம் என்று பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், ஜோ பைடனுக்கு தோல் புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவரது அலுவலக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஜோ பைடனின் நெற்றியில் தோல் புற்றுநோய் செல்கள் அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஜோ பைடனின் நெஞ்சு பகுதியில் இருந்து இதே போல் தோல் புற்றுநோய் செல்கள் அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டது.

ஜோ பைடனின் குடும்பத்தினரும் ஏற்கனவே புற்றுநோய் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர். அவரது மகன் பியூ பைடன், மூளையில் ஏற்பட்ட புற்றுநோயால் உயிரிழந்தார். ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு 2 முறை புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com