ஈரான் மீதான அமெரிக்க பொருளாதார தடைகள் வரம்பிற்குள் சிக்கிய 4 இந்திய நிறுவனங்கள்

'பொருளாதார டி-டே' என்ற பெயரில் மிகக் கடுமையான புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
ஈரான் மீதான அமெரிக்க பொருளாதார தடைகள் வரம்பிற்குள் சிக்கிய 4 இந்திய நிறுவனங்கள்
Published on

வாஷிங்டன்,

ஈரான் நாட்டில் இருந்து பெட்ரோலியம் மற்றும் பெட்ரோலிய வேதிப் பொருட்களை இறக்குமதி செய்ததற்காக, இந்தியாவை சேர்ந்த 4 நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகை எச்சரிக்கை

ஈரானின் பொருளாதாரத்தை முற்றிலும் முடக்கும் வகையில், 'பொருளாதார டி-டே' என்ற பெயரில் மிகக் கடுமையான புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.இதுகுறித்து அமெரிக்க நிதி மந்திரி ஸ்காட் பெசென்ட் கூறுகையில், ஈரானில் எஞ்சியுள்ள அனைத்து பொருளாதார கட்டமைப்புகளையும் துண்டிக்கும் இறுதி கட்ட நடவடிக்கையாக இந்த தடைகள் இருக்கும் என்று தெரிவித்திருந்தார்.

மேலும் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மற்றும் நிறுவனங்கள் மீது கடுமையான அபராதங்கள் விதிக்க நேரிடும் என்றும் அமெரிக்க வெள்ளை மாளிகை எச்சரிக்கை விடுத்தது.

ஈரான் மீதான தடை

இந்நிலையில் அமெரிக்காவின் ஈரான் மீதான தடைகளின் வலையில் நான்கு இந்திய நிறுவனங்கள் சிக்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நடவடிக்கையை எதிர்கொள்ளும் நான்கு இந்தியாவை சேர்ந்த நிறுவனங்களில், போர்டீஸ் பார்ட்னர்ஸ் எல்எல்பி (Portease Partners LLP) என்ற சுங்கத் தரகர் நிறுவனமும், அதன் கூட்டாளிகளான இந்திரிஸ்மியா அஷ்ரப்மியா ஷேக் மற்றும் ஹரிஷ் ராமச்சந்திர ரங்கி ஆகியோரும் அடங்குவர். ஈரானிய பெட்ரோலிய வேதிப்பொருட்களின் பல சரக்குகள் இறக்குமதி செய்ய அவர்கள் வழிவகுத்ததாக அமெரிக்க வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடவடிக்கையை எதிர்கொள்ளும் மற்ற இந்திய நிறுவனங்கள் சதாசிவா ஓவர்சீஸ் லிமிடெட்; பிபி சாப்டெக் பிரைவேட் லிமிடெட் மற்றும் அதன் இயக்குநர் பிரசாந்த் கார்க்; மற்றும் பிரக்ருதீஸ் இன்ப்ரா இம்பெக்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவை ஆகும். ஷேக், ரங்கி மற்றும் கார்க் ஆகியோர் இந்தியக் குடிமக்கள் என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தெரிந்தே ஈடுபட்டதற்காக

சதாசிவா ஓவர்சீஸ் நிறுவனம் பல நிறுவனங்களிடமிருந்து சுமார் 69 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஈரானிய பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்ததாகவும், அதே நேரத்தில் பிபி சாப்டெக் மற்றும் பிரக்ருதீஸ் இன்ப்ரா தலா 25 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்ததாகவும் அந்த செய்திக்குறிப்பு தெரிவித்தது.

ஈரானிலிருந்து பெட்ரோலியம் அல்லது பெட்ரோலிய பொருட்களை வாங்குதல், கையகப்படுத்துதல், விற்பனை செய்தல், கொண்டு செல்லுதல் அல்லது சந்தைப்படுத்துதல் தொடர்பான ஒரு குறிப்பிடத்தக்க பரிவர்த்தனையில் தெரிந்தே ஈடுபட்டதற்காக இந்த நிறுவனங்கள் அந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

நாடுகள் கவலை

சீனா உள்ளிட்ட முக்கிய நாடுகள் ஈரானிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வரும் நிலையில், அமெரிக்கா-ஈரான் இடையேயான மோதல் மேலும் தீவிரமடைந்தால் உலகப் பொருளாதாரத்தில் புதிய நெருக்கடி ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக பல்வேறு நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.

X

Daily Thanthi
www.dailythanthi.com