அமெரிக்காவில் இந்திய பெண் உள்பட 4 பேர் சுட்டுக்கொலை- கணவர் கொடூர செயல்


அமெரிக்காவில் இந்திய பெண் உள்பட 4 பேர் சுட்டுக்கொலை- கணவர் கொடூர செயல்
x

துப்பாக்கி சூடு நடந்த போது, அந்த வீட்டுக்குள் 3 சிறுவர்கள் இருந்தனர். அவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஒரு அலமாரியில் ஒளிந்து கொண்டிருந்தனர்.

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் அட்லாண்டா நகரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஜயகுமார் (வயது 51) தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.இந்த நிலையில், விஜயகுமார் வீட்டில் துப்பாக்கியால் சுடும் சத்தங்கள் கேட்டன. இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு வந்து விஜயகுமார் வீட்டுக்குள் சென்றனர்.அப்போது, விஜயகுமாரின் மனைவி மீனா டோக்ரா (43), உறவினர்கள் கவுரவ் குமார் (33), நிதி சந்தர் (37), ஹரிஷ் சந்தர் (38) ஆகிய 4 பேர் பிணமாகக் கிடந்தனர். அவர்கள் உடல்களில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்திருந்தது.குடும்பத் தகராறின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக, மனைவி மற்றும் உறவினர்களை விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர்.

துப்பாக்கிச் சூடு நடந்த போது, அந்த வீட்டுக்குள் 3 சிறுவர்கள் இருந்தனர். அவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஒரு அலமாரியில் ஒளிந்து கொண்டிருந்தனர். 3 சிறுவர்களையும் போலீசார் மீட்டனர்.துப்பாக்கிச் சூடு குறித்து, இந்த சிறுவர்களில் ஒருவர் போலீசாரை அவசர எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.அந்த குழந்தைகளுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை.

அவர்கள் ஒரு குடும்ப உறுப்பினரின் பாதுகாப்பில் ஒப்படைக்கப்பட்டனர். விஜயகுமார் மீது கடுமையான தாக்குதல், கொடூரமான கொலை, தீய நோக்கத்துடன் கூடிய கொலை மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கொடுமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இச்சம்பவம் தொடர்பாக இந்திய தூதரகம் கூறியதாவது:“அட்லாண்டாவில் குடும்பத் தகராறு காரணமாக நடந்த துயரமான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் எங்களை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், துயரத்தில் உள்ள குடும்பத்திற்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்துள்ளது.

1 More update

Next Story