

வாஷிங்டன்,
அமெரிக்காவில் வாஷிங்டன் பென்டகன் ராணுவ தலைமையகம், நியூயார்க் உலக வர்த்தக மையம் ஆகியவற்றின் மீது பின்லேடன் ஆதரவு அல்கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களை மோதி தாக்குதல் நடத்தி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்று குவித்தனர். 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி நடந்த இந்த தாக்குதல்களை தொடர்ந்து, அல்கொய்தா பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தந்த ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்து அங்கு தலீபான்களை ஆட்சியில் இருந்து அகற்றியது. அங்கு தொடர்ந்து 18 ஆண்டுகளாக தலீபான்களை எதிர்த்து அமெரிக்க படைகள் சண்டையிட்டு வருகின்றன.
அங்கு தற்போது 14 ஆயிரம் அமெரிக்க படைவீரர்கள் உள்ளனர். அவர்களில் 7 ஆயிரம் பேரை வாபஸ் பெற அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இது ஆப்கானிஸ்தான் போரை அமெரிக்கா முடிவுக்கு கொண்டு வருவதற்கான தொடக்கமாக பார்க்கப்படுவதாக வால் ஸ்டிரீட் ஜர்னல் பத்திரிகை கூறுகிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுமையாக விலக இன்னும் பல மாதங்கள் ஆகலாம் என அந்தப் பத்திரிகை தெரிவிக்கிறது.
சிரியாவை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் இருந்தும் அமெரிக்க படைகள் விலகுவது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன. அதேநேரத்தில் அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்படுவதால் உள்நாட்டு பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படாது என ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி கூறினார்.