நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து சிதறியதில் 70க்கும் மேற்பட்டோர் பலி

நைஜீரியாவில் மோசமான சாலைகளால் பெட்ரோல் டேங்கர் லாரிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றன.
அபுஜா,
நைஜீரியாவின் தலைநகர் அபுஜாவையும் வடக்கு நகரமான கடுனா நகருடன் இணைக்கும் சந்திப்பில் 60,000 லிட்டர் பெட்ரோலுடன் சென்ற கொள்கலன் லாரி தடம்புரண்டு விபத்திற்குள்ளானது. கொள்கலன் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதை அறிந்த அப்பகுதி மக்கள், பெட்ரோலுக்காக முண்டியடித்துச் சென்றனர். இந்தச் சமயத்தில், லாரி கவிழ்ந்து வெடித்து சிதறியது. பெட்ரோலைச் சேகரிப்பதற்காகக் கூடியிருந்த சுமார் 70-க்கும் மேற்பட்டோரும் இந்த விபத்தில் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விபத்தில், பலரும் அடையாளம் காணமுடியாத அளவுக்கு தீயில் கருகியதாகவும், பலரும் காயமடைந்தாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக நைஜீரியா ஆளுநர் உமாரு பாகோ கூறினார். நைஜீரியாவில் சரக்குகளைக் கொண்டு செல்ல ரெயில் பாதைகள் இல்லாததால், பெரும்பாலும் சாலைகளே பயன்படுத்தப்படுகின்றன. மேலும், மோசமான சாலைகளால் நைஜீரியாவில் விபத்துகளும் அடிக்கடி நடக்கின்றன.






