

ரோம்,
இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளை உள்ளடக்கிய ஜி20 அமைப்பின் உச்சிமாநாடு இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி உள்பட ஜி20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில் பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் உள்ளிட்ட ஜி20 நாடுகளின் தலைவர்கள் ரோம் நகரில் உள்ள ட்ரெவி நீரூற்றுக்கு சென்றனர். அங்கு அவர்கள் அனைவரும் ஒன்றாக குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
பின்னர் அங்குள்ள பாரம்பரிய வழக்கப்படி, அவர்கள் தங்கள் தோள்களுக்கு பின்புறத்தில் இருந்து நாணயம் ஒன்றை நீரூற்றுக்குள் சுண்டிவிட்டனர். இவ்வாறு செய்வதன் மூலம் தாங்கள் மீண்டும் ரோம் நகருக்கு வருகை தருவோம் என்பதற்காக இத்தகைய வழக்கம் அங்கு கடைபிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.