

பாரீஸ்,
ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போர் 11-வது நாளாக நீடித்து வருகிறது. ஈரானும் உக்கிரமாக தாக்குவதால் வளைகுடாவில் பதற்றம் நீடிக்கிறது. இதன் தொடர்ச்சியாக ஹார்மூஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அறிவித்தது. உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் சுமார் 5-ல் ஒரு பகுதி பொதுவாக ஹார்மூஸ் ஜலசந்தி வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது.
போர் தொடங்கியதில் இருந்து இந்த பாதை வழியாகப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. உலகளாவிய இந்த பதற்றங்களுக்கு மத்தியில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 100 அமெரிக்க டாலருக்கு (இந்திய ரூபாயில் ரூ.9,221.34) மேல் உயர்ந்தது. ஜலசந்தி போக்குவரத்து இந்த மாத இறுதி வரை நிறுத்தப்பட்டால், கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 150 டாலரைத் தாண்டி (ரூ.13,841.80) எட்டும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்த சூழலில் ஈரானின் எரிசக்தி கட்டமைப்புகளை இலக்காகக் கொண்ட தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியதே தவிர அமெரிக்கா அல்ல என்று டிரம்ப் கூறியுள்ளார்.
கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரு பேரல் 100 டாலரை கடந்து கச்சா எண்ணெய் விற்பனை செய்யப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைன் போருக்குப் பிறகு எண்ணெய் விலைகள் இந்த அளவுக்கு உயர்ந்தது இதுவே முதல் முறை. ஈரான் போர் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தை சீர்குலைக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்கா-ஈரான் இடையேயான போரால் ஏற்பட்டுள்ள கச்சா எண்ணெய் விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஜி7 நாடுகள் இன்று ஆலோசனை நடத்த உள்ளது. இதன்படி ஜி7 நாடுகளின் நிதியமைச்சர்கள் தங்களின் அவசர எண்ணெய் கையிருப்பை ஒருங்கிணைந்து சந்தையில் வெளியிடுவது குறித்து பாரிஸில் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர். ஜி7 என்பது கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றியம் உட்பட முன்னணி தொழில்மயமான நாடுகளின் குழுவாகும்.
அனைத்துலக எரிசக்தி ஆணையத்துடன் (IEA) இணைந்து எடுக்கப்பட உள்ள இந்த நடவடிக்கை, உலகளாவிய எரிசக்தி சந்தையை நிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அமெரிக்கா இந்த யோசனையை வரவேற்றுள்ள போதிலும், இது குறித்த இறுதி முடிவுகள் இன்னும் எடுக்கப்படவில்லை.