கல்வான் மோதல்: சீன வீரர்கள் அதிக அளவில் பலி என பதிவிட்ட சீனருக்கு 8 மாத சிறை தண்டனை

கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் சீன வீரர்கள் அதிக அளவில் பலி என பதிவிட்ட பிரபல சீன பிளாக்கர் 8 மாத சிறை தண்டனை பெற்றுள்ளார்.
கல்வான் மோதல்: சீன வீரர்கள் அதிக அளவில் பலி என பதிவிட்ட சீனருக்கு 8 மாத சிறை தண்டனை
Published on

பீஜிங்,

இந்தியா மற்றும் சீன வீரர்கள் இடையே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் எல்லையில் கடந்த ஆண்டு ஜூன் 16ந்தேதி மோதல் ஏற்பட்டது. இதில், இந்திய தரப்பில் 20 வீரர்கள் பலியானார்கள். சீன தரப்பில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர் என தகவல் வெளியானது. சீனா இதனை மறுத்தது.

சீனாவின் பிரபல பிளாக்கர் குய்யு ஜிமிங் (வயது 38). சமூக வலைதளத்தில் 25 மில்லியன் பேர் இவரை பின்பற்றுகின்றனர். ஆன்லைனில் லபிக்சியாவ்குய்யு என்ற பெயரில் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

வாராந்திர செய்தி இதழ் ஒன்றில் நிருபராக பணியாற்றிய அனுபவமும் கொண்டவர். இவருக்கு 8 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. அப்படி என்ன அவர் தவறு செய்து விட்டார் என்கிறீர்களா?

இந்திய வீரர்களுடனான எல்லை மோதலில் சீன தளபதி ஒருவர் உயிர் தப்பியுள்ளார். உயரதிகாரி என்ற அந்தஸ்தில் இருந்ததனாலேயே அவர் உயிர் தப்பினார் என தனது பிளாக்கில் குய்யு பதிவிட்டார். மற்றொரு பதிவில், இந்திய ராணுவ வீரர்களுடன், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் எல்லையில் நடந்த மோதலில் ஈடுபட்ட சீன வீரர்களின் பலி எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும் என சர்ச்சையை கிளப்பினார்.

இந்தியாவுடனான மோதலில் 4 சீன வீரர்கள் கொல்லப்பட்டனர். ஒருவர் காயமுற்றார் என முதன்முறையாக சீனா ஒப்பு கொண்ட பின்னர் குய்யு இதனை பதிவிட்டார்.

இது வீரமரணம் அடைந்த சீன வீரர்களுக்கு எதிரான அவதூறு ஏற்படுத்தும் விசயம் என குய்யுக்கு எதிராக குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றி கடந்த பிப்ரவரியில் வெளியான ஜின்ஹுவா செய்தியில், வீரர்களின் மதிப்புக்கு குய்யு பங்கம் ஏற்படுத்தி இருக்கிறார்.

தேசிய உணர்வுகளை புண்படுத்தி உள்ளார். நாட்டுப்பற்றாளர்களின் இருதயங்களில் நஞ்சை செலுத்தியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், கடந்த பிப்ரவரியில் ரஷ்ய பத்திரிகையான டாஸ் வெளியிட்ட செய்தியில், எல்லை மோதலில் 45 சீன வீரர்கள் கொல்லப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த மார்ச்சில் சி.சி.டி.வி. என்ற சீன ஒளிபரப்பு சேனலில் தனது செயலுக்கு குய்யு மன்னிப்பு கேட்டு கொண்டார். எனினும், சீனாவின் கிழக்கே அமைந்த ஜியாங்சு மாகாணத்தில் நான்ஜிங் நீதிமன்றம் குய்யுவுக்கு 8 மாத சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.

அடுத்த 10 நாட்களுக்குள் தேசிய ஊடகம் மற்றும் பிரபல வலைதளம் ஒன்றின் வழியே குய்யு வெளிப்படையாக மன்னிப்பு கோர வேண்டும் என்றும் உத்தரவிட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com