காசா போர்நிறுத்த ஒப்பந்த விதிமீறல்; பயங்கரவாதிகள் மீது இஸ்ரேல் படை துப்பாக்கி சூடு

3 சம்பவங்களிலும் பயங்கரவாதிகளை விரட்டியடிக்க, இஸ்ரேல் விமான படை களமிறங்கி, தாக்குதல் நடத்தி அவர்களை விரட்டியடித்தது.
டெல் அவிவ்,
காசா போர்நிறுத்த ஒப்பந்த விதிமீறலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை நோக்கி இஸ்ரேல் படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர்.
வடக்கு காசா முனை பகுதியில் செயல்பட்டு வரும் ஜெருசலேம் பிரிகேட் படையினர், சந்தேகத்திற்குரிய பயங்கரவாதிகள் சிலரை மஞ்சள் லைன் பகுதியருகே அடையாளம் கண்டு அவர்களை கலைக்க துப்பாக்கி சூடு நடத்தினர்.
எனினும், இதற்கு பின்னரும் 3 பயங்கரவாதிகள் படையினரை நோக்கி வந்துள்ளனர். படை வீரர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இதுபோன்று வேறு இரு சம்பவங்களும் நடந்துள்ளன. இந்த 3 சம்பவங்களிலும் பயங்கரவாதிகளை விரட்டியடிக்க, இஸ்ரேல் விமான படை களமிறங்கி, தாக்குதல் நடத்தி அவர்களை விரட்டியடித்தது.
எனினும், தாக்குதலில் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டார்களா அல்லது காயமடைந்தனரா? என்ற விவரங்களை இஸ்ரேல் படை தெரிவிக்கவில்லை. காசா போர்நிறுத்த ஒப்பந்தத்தின்கீழ் மஞ்சள் கோட்டு பகுதியில் இஸ்ரேல் படை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அந்த மஞ்சள் லைன் பகுதியின் கிழக்கு, வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுடன், ஹமாஸ் மற்றும் பிற பயங்கரவாதிகள் நுழைவதற்கு தடையும் விதித்து இருக்கிறது.






