எதிர்க்கட்சிகளின் வன்முறைக்கு இடையே வங்காளதேசத்தில் இன்று பொதுத்தேர்தல்

வங்காளதேசத்தில் 4-வது முறையாக பிரதமர் ஷேக் ஹசீனா வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்க்கட்சிகளின் வன்முறைக்கு இடையே வங்காளதேசத்தில் இன்று பொதுத்தேர்தல்
Published on

டாக்கா,

அண்டை நாடான வங்காளதேசத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தொடர்ந்து 4-வது முறையாக பிரதமர் ஷேக் ஹசீனா வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் ஒரு நடுநிலை அரசாங்கத்தை நிறுவி அதன்பிறகு தேர்தலை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த கோரிக்கையினை பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசாங்கம் நிராகரித்தது.

இதனையடுத்து முக்கிய எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாத கட்சி நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. மேலும் இந்த தேர்தலை புறக்கணிப்பதாகவும் அக்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான கலீதா ஜியா (78) அறிவித்தார்.

எனவே சட்டம், ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக கருதி கலீதா வீட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக சிட்டகாங், காசிபூர் நகரில் வாக்குச்சாவடி மையங்களாக அமைக்கப்பட்ட 5 பள்ளிக்கூடங்களுக்கு கலவரக்காரர்கள் தீ வைத்தனர். அங்குள்ள தீயணைப்பு சேவை புள்ளிவிவரங்கள்படி கடந்த 16 மணி நேரத்தில் 14-க்கும் மேற்பட்ட தீ வைப்பு சம்பவங்கள் அரங்கேறி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் இந்திய எல்லையான பெனாபோலில் இருந்து சென்ற பெனாபோல் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு தீ வைக்கப்பட்டது. இதில் 4 பேர் உடல் கருகி பலியாகினர்.

இந்த சம்பவத்துக்கு பயங்கரவாதிகள் காரணமா? அல்லது எதிர்க்கட்சியின் வன்முறையில் ஏற்பட்டதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பதற்றத்துக்கு இடையே அங்கு தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com