வங்காளதேசத்தில் நாளை பொது தேர்தல்; டாக்காவில் 1,400 வாக்கு சாவடிகள் பதற்றம் நிறைந்தவை என அறிவிப்பு

வங்காளதேச தேர்தலை கண்காணிக்க, 197 வெளிநாட்டு பத்திரிகையாளர்கள், 394 சர்வதேச கண்காணிப்பாளர்கள் அந்நாட்டுக்கு வந்துள்ளனர்.

வங்காளதேசத்தில் நாளை பொது தேர்தல்; டாக்காவில் 1,400 வாக்கு சாவடிகள் பதற்றம் நிறைந்தவை என அறிவிப்பு
Published on

டாக்கா,

வங்காளதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசு ஆட்சி செய்து வந்த நிலையில், வங்காளதேச விடுதலை போரில் ஈடுபட்டவர்களின் உறவினர்களுக்கு, அரசு வேலைகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் விவகாரம் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலையில் வன்முறையாக வெடித்தது.

இந்த இடஒதுக்கீடு நடைமுறைக்கு முடிவு ஏற்படுத்த வலியுறுத்தி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், போராட்டத்திற்கு 2 மாதங்களில் 500-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர்.

Also Read
நாட்டை யாரும் விற்கவும், யாரும் வாங்கவும் முடியாது: ராகுல் காந்திக்கு கிரண் ரிஜிஜு பதில்

வங்காளதேசத்தில் நாளை பொது தேர்தல்; டாக்காவில் 1,400 வாக்கு சாவடிகள் பதற்றம் நிறைந்தவை என அறிவிப்பு

இதனால், நாட்டில் பதற்ற நிலை ஏற்பட்டது. தீவிர போராட்டம் தொடர்ச்சியாக பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேறினார்.

வங்காளதேசத்தின் டாக்கா நகரில் இருந்து, அவருடைய இளைய சகோதரி ஷேக் ரெஹானாவுடன் ராணுவ விமானத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா புறப்பட்டார். இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு அவர் செல்வார் என தகவல் வெளியான நிலையில், இந்தியாவில் அவர் தஞ்சமடைந்துள்ளார். அவரை வங்காளதேசத்திடம் திரும்ப ஒப்படைக்கும்படி அந்நாட்டு அரசு இந்தியாவுக்கு கோரிக்கை விடுத்து உள்ளது.

இந்நிலையில், வங்காளதேசத்தில் பேராசிரியர் யூனூஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது. இதில், சிறுபான்மையினருக்கு எதிராக கடந்த டிசம்பர் மத்தியில் பெரும் கலவரம் வெடித்தது. இந்து சிறுபான்மையின மக்கள் அதிக அளவில் கொன்று குவிக்கப்பட்டனர்.

இதற்கு இந்தியா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. எனினும், பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல், நிவாரண உதவி என எதற்கும் உறுதியளிக்கப்படாத சூழலும், மர்ம கும்பலின் கொடூர தாக்குதல் தொடர்வதும் நடந்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு கூட இந்து சிறுபான்மையின தொழிலதிபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த சூழலில், 13-வது தேசிய நாடாளுமன்றத்திற்கான பொது தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதில், டாக்காவில் 13 தொகுதிகளை சேர்ந்த 1,400 வாக்கு சாவடிகள் பதற்றம் நிறைந்தவை என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்தலை கண்காணிக்க, 197 வெளிநாட்டு பத்திரிகையாளர்கள், 394 சர்வதேச கண்காணிப்பாளர்கள் அந்நாட்டுக்கு வந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com