

ரோம்,
இத்தாலியின் துறைமுக நகரான ஜெனோவாவில் 10ஏ தேசிய நெடுஞ்சாலையில் மொராண்டி என்னும் 200 மீட்டர் நீள பாலம் உள்ளது. இந்த நிலையில், இதன் ஒரு பகுதியானது நேற்று முன்தினம் திடீரென இடிந்து, 100 அடி கீழே இருந்த புறநகர் ரெயில் பாதை மீது விழுந்தது. இந்த அதிர்வு காரணமாக அருகில் இருந்த கட்டிடங்களும் இடிந்து விழுந்தன.
அப்போது ரெயில்பாதையையொட்டி சென்ற கார்கள் மற்றும் கனரக வாகனங்கள் இதன் இடிபாடுகளில் சிக்கின. இதனால் வாகனங்களில் சென்றவர்கள், கட்டிடங்களில் இருந்தவர்கள் மற்றும் அப்பகுதி வழியே சென்றவர்கள் என 35 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிர் இழந்தனர். 25க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 38 ஆக உயர்ந்து உள்ளது.
இதுபற்றி அந்நாட்டின் துணை பிரதமர் மற்றும் உள்துறை மந்திரி மேட்யூ சால்வினி இன்று கூறும்பொழுது, 38 பேர் உயிரிழந்து உள்ளனர் என உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. சிலரை காணவில்லை என்று கூறியுள்ளார்.