

வாஷிங்டன்,
அமெரிக்காவின் முதல் அதிபர் ஜார்ஜ் வாஷிங்டனின் தலைமுடிக் கற்றை, ஏலத்தில் சுமார் ரூ.3.70 லட்சத்துக்கு விற்பனையாகியுள்ளது. சுமார் 227 ஆண்டுகள் பழமையான இந்த தலைமுடியை 'ரிச்மண்ட் ஏல நிறுவனம்' ஏலம் விட்டது.
ஜார்ஜ் வாஷிங்டன் 1799-ம் ஆண்டு உயிரிழப்பதற்கு சற்று முன்பு, அவருக்கு விருந்தளித்து உபசரித்த ஜான் கேட்ஸ்பி என்பவரிடம் இந்த தலைமுடி இருந்துள்ளது. விர்ஜினியா மாகாணம் அலெக்ஸாண்ட்ரியா நகரில் வசித்த ஜான் கேட்ஸ்பி, 1798 மற்றும் 1799-ம் ஆண்டுகளில் வாஷிங்டனின் பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தனது இல்லத்தில் நடத்தியுள்ளார். அப்போது வாஷிங்டனுடன் ஏற்பட்ட நட்பின் அடையாளமாக இந்த தலைமுடி அவருக்குக் கிடைத்துள்ளது.
இதனைத் தனது தாத்தா ஜான் கேட்ஸ்பி நினைவுப் பொருளாகப் பாதுகாத்து வந்ததாகவும், வாஷிங்டனின் உருவப்படத்திற்குக் கீழே பிரேம் செய்து மாட்டி வைத்திருந்ததாகவும் அவரது பேத்தி ஜூலியா டென் ஐக் மெக்பிளேர், 1928-ம் ஆண்டு அளித்த வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார். பின்னர், கேட்ஸ்பியின் வாரிசுகளிடமிருந்து ஜான் கே. லாட்டிமர் என்ற சேகரிப்பாளர் இந்த தலைமுடியைப் பெற்று பாதுகாத்து வந்தார். தற்போது ஏலத்தில் இதனை வாங்கிய புதிய உரிமையாளரின் பெயர் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
19-ம் நூற்றாண்டில் அன்புக்குரியவர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களின் தலைமுடியை நினைவுச் சின்னமாகப் பாதுகாத்து வைக்கும் வழக்கம் உயர்குடி மக்களிடையே பிரபலமாக இருந்தது. அந்த வகையில், ஜார்ஜ் வாஷிங்டன் வாழ்ந்த மவுண்ட் வெர்னான் அருங்காட்சியகத்தில் அவரது 50-க்கும் மேற்பட்ட தலைமுடி மாதிரிகள் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
ஜார்ஜ் வாஷிங்டனுடன் தொடர்புடைய அரிய பொருட்களுக்கு ஏலச் சந்தையில் எப்போதும் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. முன்னதாக, கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தில், அவரது மரணத்திற்குப் பிறகு சேகரிக்கப்பட்டதாகக் கருதப்படும் 3 தலைமுடிகள் அடங்கிய லாக்கெட் சுமார் 40 ஆயிரம் டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.37.16 லட்சம்) விற்பனையானது. அதேபோல், 1776-ம் ஆண்டு வாஷிங்டன் கையொப்பமிட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கடிதம் கடந்த ஜூலை மாதம் 1 லட்சத்து 9 ஆயிரத்து 800 டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.1.02 கோடி) ஏலம் போனது.