அமெரிக்கா மீது ஜெர்மனி பரபரப்பு குற்றச்சாட்டு: ‘2 லட்சம் முக கவசங்களை திருடிவிட்டது’

2 லட்சம் முக கவசங் களை திருடிவிட்டதாக அமெரிக்கா மீது ஜெர்மனி பரபரப்பு குற்றம்சாட்டி உள்ளது.
அமெரிக்கா மீது ஜெர்மனி பரபரப்பு குற்றச்சாட்டு: ‘2 லட்சம் முக கவசங்களை திருடிவிட்டது’
Published on

பெர்லின்,

சீனாவில் உகான் நகரில் உருவான கொரோனா வைரஸ், 190 நாடுகளுக்கும் மேல் பரவி உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. இதில் அமெரிக்கா, இத்தாலி ஆகிய நாடுகள் சீனாவை காட்டிலும் அதிகமான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றன.

அதிலும் குறிப்பாக உலகளவில் அதிக எண்ணிக்கையில் கொரோனா நோயாளிகளை கொண்ட முதல் நாடாக அமெரிக்கா உள்ளது. அந்த நாட்டில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது.

அதேபோல் இந்த கொடிய வைரசால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை எட்டியுள்ளது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் திணறி வருகிறது.

முக கவசம் அணிவதன் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதில் இருந்து தப்ப முடியும் என்று நம்பப்படுவதால் பெரும்பாலான நாடுகளில் முக கவசங்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் அமெரிக்காவிலும் முக கவசங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது. இதனை சமாளிக்க டிரம்ப் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்க நிறுவனங்கள் முக கவசங்கள் உள்ளிட்ட எந்தவொரு மருத்துவ உபகரணங்களையும் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடாது என ஜனாதிபதி டிரம்ப் நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தார்.

அத்த உத்தரவில், அமெரிக்க நிறுவனங்கள் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய அதிகமான மருத்துவ பொருட் களை வழங்க வேண்டும். உள்நாட்டு பயன்பாட்டிற்கு இந்த பொருட்கள் உடனடியாக தேவை என டிரம்ப் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் சீனாவில் இயங்கி வரும் 3 எம் என்ற அமெரிக்க நிறுவனத்திடம் ஜெர்மனி முக கவசங்கள் ஆர்டர் செய்திருந்தது. அதன்படி அந்த நிறுவனம் விமானம் மூலம் முக கவசங்களை ஜெர்மனிக்கு அனுப்பி வைத்தது.

ஆனால் முக கவசங்கள் தங்களுக்கு வந்து சேரவில்லை என்றும், அமெரிக்கா அதனை பறித்துக்கொண்டதாகவும் ஜெர்மனி அரசு பரபரப்பு குற்றம் சாட்டி உள்ளது. இது குறித்து ஜெர்மனி உள்துறை மந்திரி ஆண்ட்ரியாஸ் கீசல் கூறியதாவது:-

3 எம் நிறுவனத்திடம் 2 லட்சம் என் 95 முக கவசங்கள், 1 லட்சத்து 30 ஆயிரம் அறுவை சிகிச்சை முக கவசங்கள் மற்றும் 6 லட்சம் கையுறைகள் ஆகியவற்றை ஆர்டர் செய்திருந்தோம்.

இவை அனைத்தும் விமானம் மூலம் சீனாவில் இருந்து தாய்லாந்து வழியாக ஜெர்மனி கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. ஆனால் தாய்லாந்து தலைநகர் பாங்காங் விமான நிலையத்தில் அமெரிக்க அதிகாரிகள் இவை அனைத்தையும் பறித்துக்கொண்டனர்.

இது ஒரு நவீன திருட்டு ஆகும். சர்வதேச வர்த்தக விதிகளை ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் பின்பற்றவில்லை. இது கண்டனத்துக்குரியதாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com