

பெய்ஜிங்,
சீனாவில் 5 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தபோது, வீட்டில் இருந்த 50 கிராம் எடையுள்ள தங்கக் கட்டி ஒன்றைத் தவறுதலாக விழுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர்களின் துரித நடவடிக்கையால் எண்டோஸ்கோபி சிகிச்சை மூலம் அந்தத் தங்கக் கட்டி சிறுமியின் வயிற்றில் இருந்து பாதுகாப்பாக வெளியே எடுக்கப்பட்டது.
சீனா நாட்டின் வடக்குப் பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமி ஒருவர், வீட்டில் இருந்த 4 சென்டிமீட்டர் நீளமும் 50 கிராம் எடையும் கொண்ட சிறிய தங்கக் கட்டியுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்தத் தங்கக் கட்டியை அவர் விழுங்கியுள்ளார். தங்கம் மிகவும் கனமான மற்றும் கடினமான பொருள் என்பதால், அது வயிற்றுப் பகுதியை சேதப்படுத்தி உள் இரத்தப்போக்கை ஏற்படுத்தக் கூடும் என பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.
சம்பவம் நடந்த 6 மணி நேரத்திற்குள் சிறுமியை அவரது பெற்றோர் பல உள்ளூர் ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவசரகால எண்டோஸ்கோபி சிகிச்சை வசதிகள் அங்கு இல்லாததால், இறுதியாக சிறுமி கேபிடல் மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த பெய்ஜிங் குழந்தைகள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு சிறுமிக்கு எடுக்கப்பட்ட எக்ஸ்ரே சோதனையில், தங்கக் கட்டி அவரது வயிற்றில் இருப்பது துல்லியமாகக் கண்டறியப்பட்டது. இதையடுத்து, மருத்துவர்கள் எண்டோஸ்கோபி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, சிறுமியின் உடலுக்கு எந்தவித உள் காயங்களும் ஏற்படாத வண்ணம் மிகக் குறுகிய நேரத்தில் அந்த தங்கக் கட்டியை லாவகமாக வெளியே எடுத்தனர். தற்போது சிறுமி அபாய கட்டத்தைத் தாண்டி முற்றிலும் நலமுடன் இருப்பதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சீனாவில் அதிக செலவு வைத்து வளர்க்கப்படும் குழந்தைகளை பெற்றோர் வேடிக்கையாக "தங்கம் தின்னும் மிருகங்கள்" என்று அழைப்பது வழக்கம். இந்த சிறுமி நிஜமாகவே தங்கக் கட்டியை விழுங்கியதால், "பழமொழியை நிஜமாக்கிய சிறுமி" என்ற தலைப்பில் இந்த செய்தி தற்போது சீன சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.