

கனடா,
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. உலக நாடுகளுக்கு இடையே நோய் தொற்று பரவும் அபாயத்தைத் தடுக்கும் விதமாக சர்வதேச அளவில் விமானப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சர்வதேச அளவில் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தற்போது இந்தியாவைப் பொறுத்தவரையில் கட்டுப்பாடுகளுடன் உள்நாட்டு விமானப் போக்குவரத்து குறைந்த அளவில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கனடாவில் உள்ள சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம், உலக அளவில் விமானப் போக்குவரத்தானது 2024 ஆம் ஆண்டில் தான் இயல்பு நிலைக்குத் திரும்பும் எனத் தெரிவித்துள்ளது.
தற்போதைய கணிப்பின்படி கொரோனா ஊரடங்கால் 2020ஆம் ஆண்டில் 55 சதவிகிதத்திலான விமானப் போக்குவரத்து சேவை பாதிப்படையும் என இந்த அமைப்பு கணித்துள்ளது. ஏப்ரல் மாதக் கணிப்பில் 46% மட்டுமே நடப்பாண்டு விமானப் போக்குவரத்து சேவை பாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.