

வாஷிங்டன் டி.சி.
பிரபல அமெரிக்க பாடகி மில்பென், அபிஜீத் திப்கேவை எச்சரிக்கும் வகையில் பதிவிட்டு உள்ளார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி மற்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் ஞானேஷ் குமார் பதவி விலகல் தொடர்பாக இந்தியா கூட்டணியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்காக டெல்லி ஜந்தர் மந்தரில் காந்தி ஜெயந்தி அன்று ஆம் ஆத்மி கட்சி, இந்திய மாணவர் சங்கம், இந்திய தேசிய மாணவர் சங்கம், அகில இந்திய மாணவர் சங்கம் போன்ற மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்தின. சமீபத்தில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பிலும் போராட்டம் நடைபெற்றது.
எனினும், டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த சூழலில், அமெரிக்க பாடகியான மேரி மில்பென் வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், அன்புக்குரிய திப்கே, உண்மையானது எல்லோருக்கும் சுதந்திரம் அளிக்கிறது. உங்களுக்கும் கூட.
நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய உண்மை என்னவென்றால், சூடான கேக்கை விட்டு விடுவதுபோல், நீங்கள் வெற்றி பெறவில்லை என்றால், அமெரிக்க நன்கொடையாளர்கள் உங்களை கைவிட்டு விடுவார்கள். நீங்களும் வெற்றி பெற இயலாது. ஏனென்றால், சட்டத்திற்கு கட்டுப்படாமல் இருப்பது என்பது ஒருபோதும் வெற்றி பெற்றது இல்லை.
அதற்கு பதில், உங்களுடைய அமெரிக்க கல்வி, திறமைகளை கையில் எடுத்து கொண்டு, அவற்றை நன்மைக்காக பயன்படுத்துங்கள். பிரதமர் மோடியுடன் ஒன்றாக அமர்ந்து, நவீன இந்தியாவுக்கான நேர்மறை குரலாக எதிரொலியுங்கள்.
எது சரியென்று செய்வதற்கான உண்மையான துணிச்சல் உங்களுடைய அடுத்த அடியிலேயே உள்ளது என பதிவிட்டு உள்ளார். திப்கே வெளியிட்ட பதிவு ஒன்றில், பிரதமர் மோடி தன்னுடைய சொந்த நாட்டு மக்களை அவமதிப்பது போன்று ஏன் அமெரிக்க ஆதரவை கோருகிறார்? இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிடும் உரிமையை வெளிநாட்டினருக்கு தந்தது யார்? என கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு மில்பென் பதிலளித்து உள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்தியில், பிரதமர் மோடிக்கு இந்தியர்களிடையே வலுவான ஆதரவு உள்ளது என்று உறுதியாக தெரிவித்து உள்ளார். அவருக்கு அமெரிக்கர்களின் ஆதரவு தேவை இல்லை. அழகாக 150 கோடி இந்திய குடிமக்களின் ஆதரவை 25 ஆண்டுகளாக அவர் பெற்றிருக்கிறார்.
அதுவும் 12 ஆண்டுகள் பிரதமராக, அதிலும் தொடர்ச்சியாக 3 முறை. 2029-ம் ஆண்டில் மீண்டும் அந்த ஆதரவை பெறுவார். இதுவே உண்மை என்று தெரிவித்து உள்ளார்.