

50-வது ஆண்டு
அமீரகத்தில் இந்த ஆண்டு பொன் விழா ஆண்டாக கொண்டாடப்பட இருப்பதால் தி இயர் 50 அதாவது ஐம்பதாவது ஆண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அமீரக அதிபர் மேதகு ஷேக் கலீபா பின் ஜாயித் அல் நஹ்யான் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
இந்த ஐம்பதாவது ஆண்டு அடுத்த மாதம் ஏப்ரல் 6-ந் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு (2022) மார்ச் 31-ந் தேதி வரை இருக்கும். அமீரகத்தின் பொன் விழா ஆண்டையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் இந்த ஆண்டு முழுவதும் நடைபெறும். இந்த பொன் விழா ஆண்டு கொண்டாட்டங்களை சிறப்பாக கொண்டாடும் வகையில் கமிட்டி ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கமிட்டியின் தலைவராக அமீரக வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்புத்துறைக்கான மந்திரி ஷேக் அப்துல்லா பின் ஜாயித் அல் நஹ்யான் இருப்பார். துணைத் தலைவராக ஷேக்கா மரியம் பிந்த் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் செயல்படுவார். மேலும் அரசு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் பிரதிநிதிகள் இந்த குழுவில் இடம் பெறுவர்.
இந்த ஐம்பதாவது ஆண்டு அறிவிப்பின் முக்கிய திட்டங்களாவது:-
இந்த ஐம்பதாவது ஆண்டு விழாக்கோலம் கொண்டதாக இருக்கும். அமீரகத்தை தங்களது தாய்நாடாக நினைப்பவர்கள் அனைவரும் இதில் இணைந்து கொள்ளலாம். அமீரகத்தைச் சேர்ந்தவர்கள் அமீரக நிறுவன தலைவர்கள் ஏற்படுத்திய சாதனைகள் உள்ளிட்டவற்றை நினைவு கூர்ந்து பெருமைப்படும்படி நடந்து கொள்ள வேண்டும்.
ஐக்கிய அரபு அமீரகம் அடுத்த 50 ஆண்டுகளில் இன்னும் சிறப்பான வளர்ச்சியை அடைய இளைஞர்கள் தங்களது கனவை நனவாக்கும்படி செயலில் ஈடுபட வேண்டும்.
ஐக்கிய அரபு அமீரகமானது கடந்த 1971-ம் ஆண்டு அனைத்து அமீரகங்களையும் ஒருங்கிணைத்து ஏற்படுத்தப்பட்டது. தற்போது இது 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாகும்.
அமீரகத்தை நாம் இன்று உலகில் மிகவும் வளர்ச்சி பெற்ற நாடுகளில் ஒன்றாக பார்க்கிறோம்.
இந்த நாட்டை கட்டமைப்பதில் அமீரகத்தைச் சேர்ந்தவர்களுடன் இணைந்து வெளிநாட்டினரும் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர். இந்த 50-வது ஆண்டு நமது அடுத்த பயணத்துக்கான ஒரு வாய்ப்பாக இருந்து வருகிறது. இந்த பயணத்திலும் அனைவரும் இணைந்து தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும்.
நாம் மாறி வரும் உலகில் வசித்து வருகிறோம். புதிய கண்டுபிடிப்புகள் உள்ளிட்டவற்றை உருவாக்குவோருக்கு அமீரகம் ஒரு முக்கிய இடமாக இருந்து வருகிறது. இதன் மூலம் நாம் சிறப்பான எதிர்காலத்தையும், சிறந்த ஒரு நாடாகவும் ஏற்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமீரக அதிபரின் இந்த அறிவிப்புக்கு, துணை அதிபரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம், அபுதாபி பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் மற்றும் ஆட்சியாளர்கள் உள்ளிட்ட பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அபுதாபி பட்டத்து இளவரசர் கூறுகையில், அமீரகத்தின் 50-வது ஆண்டு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. நாம் கடந்து வந்த பாதையை நினைவு கூற கடமைப்பட்டுள்ளோம். இதே வேகத்துடன் நாம் அடுத்த 50 ஆண்டுகளில் செயல்படுவோம் என்றார்.